Friday, 5 September 2014

நவராத்திரி கொலு வைப்போம், கொண்டாடுவோம், வணங்குவோம்

நவராத்திரி கொலு வைப்பதைப் பற்றியும், செய்ய வேண்டிய நைவேத்தியங்கள், கொண்டாட்டங்கள் பற்றி, பார்ப்போம்.

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறு நாள், கொலு ஆரம்பிக்கும்.

வீட்டில் வழக்கமாக கொலு வைப்பவர்கள் கலசம் வைப்பார்கள்.

எப்பொழுதும் போல, பிள்ளையார், குல தெய்வம், இஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட தெய்வங்களை மனதினுள் வணங்கி விட்டு, ஒரு வெள்ளிச் செம்பு அல்லது தாமிரச்(செப்பு) செம்பை எடுத்து, நன்றாகக் கழுவி விட்டு, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

அதனுள் பச்சரிசியை நிரப்ப வேண்டும். அதனுள் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்களையும், மற்றும் காசு இவற்றைப் போட வேண்டும். தங்க நாணயம், வெள்ளி நாணயம், செப்பு நாணயம் இருந்தால் இவற்றையும் போடலாம்.

கலசத்தின் மேல் மாவிலை அல்லது வெற்றிலையை சுற்றி வர வைத்து, அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும்.

தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும்.

இந்தக் கலசத்தை, கொலு அம்மனாக பாவித்து, பூஜை அறையிலிருந்து எடுத்து வந்து, கொலுப் படியில் வைக்க வேண்டும்.

கலசத்தின் மேல் தினமும் பூக்கள் வைக்க வேண்டும்.



பூஜையாக செய்ய வேண்டும் என்றில்லாமல், குழந்தைகளின் ஆசைக்காக கொலு வைப்பவர்கள், கலசம் வைக்க வேண்டும் என்பதில்லை.

புரட்டாசி மாத அமாவாசையன்று,  கொலு வைப்பதற்கான வேலைகளைத் தொடங்கலாம். (கொலு மறு நாள்தான் ஆரம்பிக்கும்)

மரப்பாச்சி பொம்மைகள் இருந்தால், அவற்றை ஜோடியாக அமாவாசையன்று கொலுப்படியில் வைத்து விடலாம்.




கொலுப் படிகள் 5 அல்லது 7 அல்லது 9 அல்லது 11 படிகள் வைக்கலாம்.

ஹாலில் கிழக்கு மேற்காக இருக்குமாறு படிகளை அமைக்க வேண்டும்.

இப்போதெல்லாம் ரெடிமேட் ஆக, படிகள் கிடைக்கின்றன.

நம் வீட்டு ஹாலின் அளவுக்குத் தகுந்த மாதிரி, இவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

கொலுவின் முன்னால், விளக்கேற்ற, வருபவர்கள் உட்கார, கொலுவைப் பார்க்க, இதற்குத் தகுந்தாற்போல, இடத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்,





படிகளை அமைத்த பின், சுத்தமான வெள்ளைத் துணியை, படிகளின் மேல் விரிக்க வேண்டும்.

மேல் படிகளில், முதலில் நடுவில் பிள்ளையார் பொம்மையை வைத்து, மற்ற தெய்வ உருவங்களை வைக்க வேண்டும்.

அடுத்த படியாக மீனாட்சி கல்யாணம், தசாவதாரம், போன்ற செட் பொம்மைகளை வைக்கலாம்.

அதற்கு அடுத்தபடியாக, மனிதராகப் பிறந்து, மகான்களாக ஆனவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.(விவேகானந்தர், சாரதா தேவி, ஷீரடி சாயிபாபா, பரம ஹம்ஸர்)

பிறகு, மற்ற பொம்மைகள் - கிரிக்கெட் வீரர்கள், குறவன் குறத்தி, செட்டியார் பொம்மைகள் இப்படி வைக்கலாம்.

பிறகு மிருக பொம்மைகள் - சிங்கம், புலி, குரங்கு பொம்மைகள் போன்றவை.

அடுத்த படியில் பறவை பொம்மைகள்.

கீழ்ப் படிகளில் ஊர்வனவற்றின் பொம்மைகள் மற்றும் அனைத்து பொம்மைகள் வைக்கலாம்.

கலசம் வைப்பதாக இருந்தால், கீழே இருந்து முதல் படியிலோ அல்லது மூன்றாவது படியிலோ(கைக்கு எட்டும் தூரத்தில்) கலசத்தை வைக்கலாம். தினமும் பூ வைக்க வேண்டும். பூப் போட்டு, பூஜை செய்ய வேண்டும் அல்லவா.

கலசம் வைக்கவில்லை என்றாலும், கொலு என்பது அம்மன் வடிவம்தான். அதனால் தினமும் மாலையில் விளக்கேற்றி, சுண்டல் போன்ற நைவேத்தியங்கள் தினமும் செய்ய வேண்டும்.

தினமும் கொலுவின் முன்னால், தெரிந்த கோலங்களைப் போடவும். முடிந்தால் ரங்கோலி போடலாம்.

கொலுவின் இரண்டு பக்கமும் கீழே விளக்கேற்றி வைக்கலாம். பாதுகாப்பு குறைவு, குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் பூஜையறையில் மட்டும் ஏற்றினாலும் போதும். நைவேத்தியத்தையும் பூஜையறையில் விளக்கேற்றி, நைவேத்தியம் செய்து, கொலுவுக்கு முன்னால், கொண்டு வந்து வைக்கலாம்.



அமாவாசைக்கு அடுத்த நாள் கொலு ஆரம்பம்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு.

அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி வழிபாடு.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

யு ட்யூபில் துர்க்கா பாடல்கள், மஹாலஷ்மி ஸ்லோகங்கள், சரஸ்வதி ஸ்லோகங்கள் கிடைக்கும். இவற்றை மாலை நேரங்களில் ஒலிக்க விடுங்கள்.

லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி இவற்றைப் படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்து, கேட்கலாம்.

ஸ்ரீஸுக்தம், ஸ்ரீ தேவி பாகவதம் இவையும் ஒலி வடிவில் யு டியூபில் கிடைக்கின்றன. இவற்றையும் மாலை வேளைகளில் ஒலிக்கச் செய்யுங்கள்.

வீட்டுப் பெண்கள் தினமும் சுத்தமான, உடைகளை உடுத்தி, மலர் சூடி, மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

இன்னும் சில குறிப்புகளை கீழே தருகிறேன். இவற்றில் எதெல்லாம் செய்ய முடிகிறதோ, அவற்றை செய்யலாம்.

ஒன்பது நாட்களும் -  முதல் நாள் - இரண்டு வயது குழந்தை தொடங்கி, பத்து வயது சிறுமி வரை வீட்டுக்கு அழைத்து, ‘குமாரி பூஜை’ செய்யலாம்.

’குமாரி பூஜை’ என்பது, குறிப்பிட்ட வயதுக் குழந்தையை வீட்டுக்கு அழைத்து,(அல்லது நம் வீட்டுக் குழந்தைக்கும் செய்யலாம்) , ஒரு கோலமிட்ட பலகையில் கிழக்குப் பார்த்து, உட்கார வைக்க வேண்டும்.

சந்தனம், குங்குமம், பூ கொடுக்க வேண்டும்.

சுண்டல், இனிப்பு, ஏதேனும் பரிசு, தட்டில் வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூவுடன் கொடுக்க வேண்டும்.

முடிந்தால், பொருத்தமான உடைகள் கூடக் கொடுக்கலாம்.

இவ்வளவுதான்.

குமாரி பூஜை:

இந்த குமாரி பூஜையின் பலனை ஆயிரம் நாவைக் கொண்ட ஆதிசேஷனாலும் அளவிட்டுக் கூற முடியாதாம், அந்த அளவுக்கு நற்பலன்கள் கிடைக்குமாம்.

நாள்     சிறுமியின் வயது     தேவதா பெயர்     பூஜா பலன்

1                       2                        குமாரிகா                    தரித்திர நாசம்
2                       3                        திரிமூர்த்தி                தன தான்ய வளம்
3                       4                        கல்யாணி                  பகை ஒழிதல்
4                       5                        ரோகிணி                    கல்வி வளர்ச்சி
5                       6                        காளிகா                       துன்பம் நீங்குதல்
6                       7                        சண்டிகா                     செல்வ வளர்ச்சி
7                       8                        ஸாம்பவி                  ஷேம விருத்தி
8                       9                        துர்க்கா                        பயம் நீங்குதல்
9                     10                        ஸுபத்ரா                    ஸர்வ மங்களம் உண்டாதல்

பரிசுப் பொருட்களுக்கான யோசனைகள்:

ரவிக்கைத் துணி, ஸ்டிக்கர் பொட்டு, மருதாணி கோன், ஹேர் பாண்ட், கிளிப்கள், சிறிய பூஜை புத்தகங்கள், சிறிய கண்ணாடி, சீப்பு, கண் மை, ஐப்ரோ பென்சில், ஐ லைனர், சிறிய லேடீஸ் கர்சீப்கள், பேனா, பென்சில்கள், ஸ்டேஷனரி பொருட்கள்,  குளிக்கும் சோப்கள், லிக்விட் சோப்கள், சென்ட் பாட்டில்கள்,  பார்பி பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் போன்றவை.


தினமும் இரவு படுக்கப் போகு முன், மஞ்சள் பொடி, சுண்ணாம்பு கலந்த ஆரத்தி எடுக்க வேண்டும். இதை, கால் படாத இடத்தில்(செடியின் கீழ்) ஊற்றி விட வேண்டும்.

தெய்வத்துக்கு எடுக்கும் ஆரத்தியை, கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.

மனிதர்களுக்கு எடுக்கும் ஆரத்தியை, வாசலில் கோலத்தில் ஊற்ற வேண்டும்.



ஒன்பது நாட்களும் கொலுவின் முன்னால் கோலங்கள்:

1. அரிசி மா                               பொட்டுக் கோலம்
2. கோதுமை மா                     கட்டம்
3. முத்து                                     மலர் வடிவம்
4. அட்சதை                               படிக்கட்டு
5. கடலை                                  பறவையினம்
6. பருப்பு                                     தேவி நாமம்
7. மலர்                                        திட்டாணி
8. காசு                                          பத்மம்(தாமரை)
9. கற்பூரம்                                  ஆயுதம்

ஒன்பது நாட்களிலும் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் அவர்கள் நீராடுவதற்காக

பச்சிலை,
பூலாங்கிழங்கு
சண்பக மொட்டு
கஸ்தூரி மஞ்சள்
திரவியப் பட்டை
காசுக்கட்டி
லாஷாரசம்
கஸ்தூரிகாபத்ரம்
கோரோசனம்

மற்றும்

எண்ணெய்
மஞ்சள்
குங்குமம்
பன்னீர்
சந்தனம்
வாசனைத் தைலம்
நலங்கு மஞ்சள்
மருதோன்றி
புஷ்ப நீர்

இவற்றில் எதெல்லாம் கொடுக்க முடிகிறதோ, அவற்றைக் கொடுக்கலாம்.

தாம்பூலத்துடன்

வாழை, மாம்பழம், பலா, கொய்யா, மாதுளை, நாரத்தை, பேரீச்சைப் பழம், திராட்சை, நாவற்பழம்

இவற்றை அனைவருக்கும் கொடுக்கலாம்.

நவராத்திரி ஒன்பது நாட்களும், அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை நம் வீட்டுக் கொலுவுக்கு வரும்படி அழைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல உடை உடுத்தி, கையில் சந்தனம், குங்குமம் கொடுத்து, மற்றவர்களை அழைக்கச் சொல்லலாம்.

குழந்தைகளுக்கு ராதை கண்ணன், ஆண்டாள், கிமானோ ட்ரஸ் இப்படியெல்லாம் வேடம் போட்டு விடலாம்.

பட்டுப்பாவாடை உடுத்தி, தலையில் பூ தைத்து விடலாம்.

நவராத்திரியின் போது, தினமும் வீட்டுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல், தாம்பூலமும் நைவேத்திய பிரசாதமும் கொடுக்க வேண்டும்.

வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கும் தாம்பூலம், பரிசு வழங்க வேண்டும். வித்தியாசம் பார்க்கக் கூடாது.


நவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள்

சுண்டல்
வறுவல்
துவையல்
பொறியல்
அப்பளம்
வடகம்
சூரணம்
முறுக்கு
திரட்டுப்பால்

வெண்பொங்கல்
புளியோதரை
சர்க்கரைப் பொங்கல்
கதம்ப சாதம்(காய்கறி கலந்த சாதம்)
தயிர் சாதம்
தேங்காய் சாதம்
எலுமிச்சம்பழ சாதம்
பாயசம்
அக்கார அடிசல்

இவற்றை செய்யலாம்

கடைசி நாளன்று மகா நைவேத்தியம் என்று சொல்லப்படும் வெள்ளை சாதம் படைக்க வேண்டும்.(இவற்றை வடிக்கக்கூடாது. குக்கரில் பொங்கி இறக்கலாம்.)

கடைசி நாளன்று சுத்தான்னம்(வெள்ளை சாதம்), இலை வடகம், வெண்ணெய், சுக்கு வென்னீர் இவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

மேலே சொன்னவற்றில் எதெல்லாம் முடிகிறதோ, எப்படி எல்லாம் செய்ய முடிகிறதோ, அது போல செய்து கொள்ளலாம்.

நைவேத்தியத்துக்கான யோசனைகள்:

ஞாயிறு:  கோதுமையில் செய்த அப்பம் அல்லது கடலைப் பருப்பு சுண்டல்

திங்கள்: வெல்லப் பாயசம் அல்லது வெண் பொங்கல் அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலை சுண்டல்

செவ்வாய்: சிவப்பு கொண்டைக் கடலை சுண்டல் அல்லது சோயா பீன்ஸ் சுண்டல்

புதன்: பாசிப்பயறு சுண்டல் அல்லது பச்சைப் பட்டாணி சுண்டல்
]
வியாழன்: கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்

வெள்ளி: வெண் பொங்கல் அல்லது கல்கண்டு சாதம் அல்லது மொச்சை சுண்டல்

சனி: காராமணி சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல்

தினசரி அணியும் உடைகளுக்கான யோசனைகள்:

ஞாயிறு: சிவப்பு அல்லது ஆரஞ்சு

திங்கள்:  லேசான ஹாஃப் ஒயிட் நிறம்

செவ்வாய்: சிவப்பு அல்லது ஆரஞ்சு

புதன்: பச்சை

வியாழன்: மஞ்சள், பொன் நிறம்

வெள்ளி: வெள்ளி நிற ஜரிகை கலந்த உடைகள்

சனி:  நீல நிறம்

சரஸ்வதி பூஜை:

கொலு வைத்தாலும் வைக்கா விட்டாலும், மஹா நவமி என்னும் சரஸ்வதி பூஜையை, சிறப்பாக செய்ய வேண்டும்.

முந்தைய பதிவான பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் பதிவில் சொல்லியிருப்பதைப் போன்று, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

கறுப்பு கலக்காத புதிய ரவிக்கைத் துணியை, அணிவிக்க வேண்டும்.

புத்தகங்கள், பென்சில், பேனாக்கள் போன்றவற்றை அடுக்கி, அதன் மேல், புதிய ரவிக்கைத் துணி(வெள்ளையில் பூப்போட்டதும் போடலாம்) விரித்து, அதன் மேல், வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் வைக்கலாம்.

இத்துடன் சிறிய கலசம் வைக்கலாம்.(விருப்பமிருந்தால்)

ஒரு செம்பில் நீர் அல்லது பச்சரிசி நிரப்ப வேண்டும்.

கிராம்பு ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களை உள்ளே போட வேண்டும்.

தங்கம், வெள்ளி, நாணயங்களும் போடலாம்.

இதன் மேல் வெற்றிலை அல்லது மாவிலையை சுற்றி வர அழகாக அமைக்க வேண்டும்.

ஒரு தேங்காயை குடுமியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டுப் பிசைந்து, தேங்காயின் மேல் முகம் மாதிரி வைக்க வேண்டும்.

இரண்டு பூண்டுப் பற்களை, கண்கள் மாதிரி வைக்கலாம்

இரண்டு மிளகு எடுத்து, பூண்டுப் பற்களின் நடுவில் வைக்கலாம்.

இந்தத் தேங்காயை, கலசத்தின் மீது(குடுமி பகுதி மேல் நோக்கி இருக்குமாறு) வைக்க வேண்டும்.

மஞ்சளின் நடுவில் மூக்கு மாதிரி செய்து, மூக்குத்தி போல சிறிய கற்கள் வைக்கலாம்.

விரும்பினால், தங்க செயின்கள் அல்லது முத்து மாலைகள் அணிவித்து, அழகு படுத்தலாம்.

பூக்கள் வைக்க வேண்டும்.

வீட்டுக் கதவுகள், டி.வி. ஃப்ரிட்ஜ், அடுப்பு, கார் எல்லாவற்றுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, பூ வைக்கலாம்.

இசை வாத்தியங்கள்(வயலின்/வீணை/கிடார் போன்றவை) இவற்றுக்கும் சந்தனம், குங்குமம், பூ வைக்கலாம்.

நைவேத்தியங்கள், பூஜைகள் முந்தைய பதிவில் சொன்னது போல(கொழுக்கட்டை தவிர) வடை, பாயசம், சுண்டல் எல்லாம் செய்து படைக்கலாம். பழங்கள் படைக்கலாம்.

மறு நாள் விஜய தசமியன்று, விளக்கேற்றி, ஏதேனும் நைவேத்தியம் செய்து விட்டு, வீட்டுப் பெரியவர்கள் அல்லது வீட்டுத் தலைவர்/தலைவியைக் கொண்டு, புத்தகங்கள், மஞ்சள் பிள்ளையார், கலசம் இவற்றை லேசாக வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும்.

விஜய தசமியன்று புதிய கலைகளைக் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு புதிய பாடங்கள் ஆரம்பிக்கலாம்.

அன்று இரவு, மரப்பாச்சி பொம்மைகள் அல்லது முதலில் வைத்த ஒன்றிரண்டு பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும்.

மறு நாளிலிருந்து எல்லா பொம்மைகளையும் எடுத்து வைத்து விடலாம்.

பின் குறிப்பு:

நவராத்திரியின் போது, முடிந்த அன்று கோவில்களில் வைத்திருக்கும் கொலுவைப் போய் பார்க்கலாம்.

சாதாரணமாக எட்டாம் நாளன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் இருக்கும்.

இந்த அலங்காரத்தில் அம்மனைப் பார்த்தால், கட்டாயம் மறு நாள் அதே கோவிலுக்குச் சென்று, அம்மனின் சரஸ்வதி அலங்காரத்தையும் பார்த்து வர வேண்டும்.

சரஸ்வதி பூஜையன்று கோவிலுக்குப் போகும்போது, பென்சில்கள், பேனாக்கள் போன்ற பொருட்களை பூஜையில் வைத்து, அங்கு வரும் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழலாம்.















Thursday, 21 August 2014

குல தெய்வ வழிபாடு

முழு முதற் கடவுளான கணேசரை வணங்கியாயிற்று.




இந்தப் பதிவில் குல தெய்வ வழிபாடு பற்றி:

எந்த ஒரு ஹோமம், பூஜையிலும் சங்கல்பம் செய்யும்போது,

பிள்ளையாரை வணங்கிய பின்,

ஸ்ரீ குல தேவதா நமஹ!
ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ!
ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ!

என்று சொல்லச் சொல்வதை கவனித்திருப்பீர்கள்.

வீட்டில் ஏதேனும் மனக் குறையிருந்தால், பெரியவங்க  கேப்பாங்க - குலதெய்வ வழிபாடெல்லாம் சரியாகச் செய்கிறீர்களா என்று. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது குல தெய்வ வழிபாடு.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின்,

ஓம் கணேசாய நமஹ!
ஓம் ஸ்ரீ குல தேவதா நமஹ!
ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ!
ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ!

என்று ஒரு முறை அல்லது மூன்று முறை சொல்லுங்க. இதற்கு ஒரு நிமிடம்தான் ஆகும்.

இஷ்ட தேவதை என்பது - நம்மில் பலருக்கும் சிறு வயதில் போன கோவில் அல்லது முருகன், பிள்ளையார், மீனாட்சி அம்மன் என்று ஒரு தெய்வ வடிவம் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அந்தத் தெய்வத்தை இஷ்ட தெய்வமாக நினைத்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட தேவதை என்பது - நம் வாழ்வில் நடந்த இனிய சம்பவங்கள் - இந்த சாமியை தரிசனம் செய்த பின் நடந்தது, இந்தக் கடவுளுக்கு வேண்டிக்கிட்டதும் எல்லாம் நல்லாவே நடக்குது என்று ஒரு நம்பிக்கை இருக்கலாம். அந்தத் தெய்வத்தை அதிர்ஷ்ட தேவதையாக நினைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் பூஜையறையில் ஒரு உண்டியல்/டப்பா வைத்துக் கொள்ளுங்கள். இதில் குல தெய்வத்துக்கான காணிக்கையை போட்டு வைக்கலாம். எவ்வளவு என்பது அவரவர் விருப்பம்.

மாதம் ஒரு முறை ஒரு சிறிய தொகை போடலாம்.

வெளியூர்ப் பயணம் கிளம்பும்போது காணிக்கை போடலாம்.

வீட்டில் யாருக்காவது உடல் நலம் சரியில்லையென்றால்/ஏதாவது செக் அப்புக்கு ஹாஸ்பிடல் போனால், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, உண்டியலில் காசு சேர்க்கலாம்.

மனதில் நினைத்த நல்ல காரியம் நல்லபடி நடந்ததும், ஆண்டவனுக்கு நன்றி சொல்லி, காசு போட்டு வைக்கலாம்.

இப்படி உண்டியலில் சேர்ந்த தொகையை, வருடம் ஒரு முறை குல தெய்வக் கோவிலுக்குப் போகும்போது, அங்கு உள்ள உண்டியலில் சேர்க்கலாம். அல்லது அந்தத் தொகையைக் கொண்டு, அபிஷேகப் பொருட்கள், மாலை, பூ, வஸ்திரங்கள்(தெய்வத்துக்கான ஆடைகள்) எல்லாம் வாங்கலாம்.

வருடம் ஒரு முறை - எப்போது?

நம் வீட்டில் மாசி மாதத்தில்(ஃபிப்ரவரி - மார்ச்) வரும் சிவராத்திரியன்று கோவிலில் பூஜைகள் நடக்கும். அப்போது போகலாம்.

குழந்தைகளுக்கு முதல் மொட்டை - குலதெய்வக் கோவிலில் போட்டு விட்டு, அதற்குப் பிறகு, மற்ற கோவில்களில் நம் பிரார்த்தனைபடி செலுத்தலாம்.

விரும்பினால் காது குத்தும் வைபவத்தையும், கோவிலிலேயே செய்யலாம்.

நம் குலதெய்வத்தின் பெயர், கோவில் இருக்கும் இடம்:

மதுரையை அடுத்த இராமனாதபுரம் மாவட்டத்தில், அடுத்து உள்ள கீழக்கரை என்ற ஊரில் இருந்து, வையை/(வைகை) என்ற ஊரில் இருக்கிறது நம் குலதெய்வத்தின் கோவில்.

மதுரையிலிருந்து கார் மூலமாக செல்லலாம். அல்லது கீழக்கரையிலிருந்து, நத்தம் என்ற ஊர் வரைக்கும் பஸ்ஸில் போய், அங்கிருந்து ஆட்டோ அல்லது வேன் மூலம் போக வேண்டும்.

கரையடியான் என்பது நம் குல தெய்வத்தின் பெயர். இவர் குடியிருக்கும் இடம் கண்மாய்க் கரை. அதனால் கரையடியான் என்று சொல்கிறோம்.

குலதெய்வம் சாஸ்தா வடிவம்.

மூலஸ்தானத்தில் விநாயகர் ஒரு பக்கம் இருக்கிறார்.

இரு பக்கமும் பூரணம், பொற்கொடி என்ற பெயருடன் கூடிய அம்மன்கள் இருக்கிறார்கள். நடுவில் ஐயனார்.


ஐயனார், சாஸ்தா, கரையடியான் என்பது எல்லாமே இவருடைய பெயர்கள்தான்.

ஐயனாரின் தங்கை பெயர் இராக்கம்மாள். இவருக்கு கோவிலில் தனி சன்னிதி இருக்கிறது.

இவர்களுடன் கருப்பண்ண சாமி, சக்தியின் சூலமும் இருக்கின்றனர்.

இராக்கம்மாள் தெய்வம் ஐயனாரின் தங்கை. இவர் இங்கேயே கோவில் இருப்பதால், இந்த குலதெய்வத்தை வணங்குபவர்கள் தங்களுக்குள் சம்பந்தம் செய்து கொள்ளலாம்.

(சாதாரணமாக ஒரே குல தெய்வத்தை வணங்குபவர்கள் சகோதரர்கள் என்பதால் தங்களுக்குள் பெண் கொடுத்து/எடுக்க மாட்டார்கள்).

இந்த ஊரிலேயே ஒரு முருகன் கோவிலும், ஊரணிக்கரையில் ஒரு பிள்ளையாரும் இருக்கிறார்கள். குலதெய்வக் கோவிலுக்குப் போகும் போது இவ்ர்களையும் வணங்குவது வழக்கம்.

கோவிலுக்கு பூஜைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்:

அபிஷேகப் பொருட்கள்:

மஞ்சள் பொடி
நல்லெண்ணெய்
நெய்
சந்தனாதித் தைலம்
பன்னீர்
ஆண்டாள் ஸ்னானப் பவுடர்
பச்சரிசி மாவு
சந்தனம்
விபூதி
இளநீர்
தேன்
பால்
பச்சைக் கற்பூரம்

கோவிலில் பொங்கல் வைப்பதாக இருந்தால்:

பச்சரிசி, மண்டை வெல்லம், கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு, நெய், பாசிப்பருப்பு, பொங்கல் பானை, கரண்டி, தட்டுக்கள், தீப்பெட்டி.

பூஜைப் பொருட்கள்:

ஊதுபத்தி
சூடன்
சாம்பிராணி
தசாங்கம்
சந்தனம்
நல்லெண்ணெய்
வெற்றிலை
பாக்கு
பழங்கள்
கல்கண்டு
தாம்பாளங்கள்

இவற்றுடன், புதிய அகல் விளக்குகள் 12 அல்லது 15  வாங்கிக் கொள்ளவும். (வாங்கியதும் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இவற்றைப் போட்டு வைக்கவும்.  பிறகு காய வைத்து, எடுத்துக் கொள்ளவும். விளக்கேற்றும்போது நெய்/எண்ணெயை, உறிஞ்சாமல் இருக்கும்)

பஞ்சுத்திரி இரண்டு கட்டு, விளக்கேற்ற நெய் அல்லது நல்லெண்ணெய் தனியாக வைத்துக் கொள்ளவும்.

கோவிலில் இந்த விளக்குகளை ஏற்றி வைக்கவும். முதலில் பிள்ளையாருக்கும், பிறகு மற்ற தெய்வஙகளுக்கும் விளக்கு  ஏற்றவும்.


சுவாமிக்கு உடைக்கத் தேங்காய்கள் = 10

பிள்ளையார்  - 1
ஐயனாருக்கு - 3
கருப்பண்ணசாமி - 2
இராக்கம்மாள் - 1
விடலைக்காய்(ஊருணிப் பிள்ளையாருக்கு) 1
முருகன் கோவிலில் - 1
ஊர்க் காளியம்மன் கோவிலுக்கு - 1(விடலைக்காய்)

மாலை/பூக்கள்

மாலை(சிறிய அளவு போதும்) 15
கதம்பம்                         10 முழம்
தலைக்கு வைக்க  மல்லிகை/முல்லைப்பூ

வஸ்திரங்கள்:

பிள்ளையார் துண்டுகள்  2(பிள்ளையாருக்கு இடையில் கட்ட, மேலே அணிவிக்க)

கரையடியானுக்கு   2 வஸ்திரங்கள் (இடையில் கட்ட, மேலே அணிவிக்க)

பூரணம், பொற்கொடி, இராக்கம்மாள் மூவருக்கும் சிற்றாடை  3

கருப்பண்ணசாமிக்கு 2 பிள்ளையார் துண்டுகள்

முருகன் கோவிலில் முருகனுக்கு இரண்டு வஸ்திரங்களும், வள்ளி தேவயானைக்கு 2 வஸ்திரங்களும்.

முருகன் கோவிலில் இருக்கும் பிள்ளையாருக்கு 2 வஸ்திரங்கள்

ஊரணிப் பிள்ளையாருக்கு 2 பிள்ளையார் துண்டுகள்.

வஸ்திரங்கள் லிஸ்ட்:

பிள்ளையார் துண்டுகள்       8 அல்லது 10

சிற்றாடை சிறியது                 3

சிற்றாடை மீடியம் சைஸ்   2(வள்ளி தெய்வானைக்கு)

வண்ண வஸ்திரங்கள்          2(ஐயனாருக்கு) (மீடியம் சைஸ்)

வண்ண வஸ்திரங்கள்          2முருகனுக்கு) (கொஞ்சம் பெரிய சைஸ்)


இவை எல்லாம் மதுரையில் எழுகடல் தெருவில் இருக்கும் வேல் முருகன் ஸ்டோர்ஸில் கிடைக்கும்.

சென்னையிலும் மயிலாப்பூரில் கிரி ஸ்டோர்ஸில் வாங்கலாம். அல்லது போத்தீஸ் போன்ற கடைகளிலும் கிடைக்கும்.

பூஜைப் பொருட்களை மதுரையில் கீழ மாசி வீதியில், தேர் முட்டிக்கு எதிரில் உள்ள கடையில் வாங்கலாம்.

பூ மற்றும் மாலைகள் - மீனாட்சி அம்மன் கோவிலில் முதல் கடை திரு கன்னையாவின் கடையில் அல்லது பக்கத்துக் கடையில் வாங்கிக் கொள்ளலாம்.

குடும்பங்களில் நடக்கும் திருமணங்கள், புதுமனை புகு விழாக்கள் போன்ற விசேஷங்களுக்கு, முதல் பத்திரிக்கையை குல தெய்வத்துக்கு வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் இவற்றுடன் பத்திரிக்கையை வைக்க வேண்டும்.

மேலே சொன்ன பூஜை முறைகளை (அபிஷேகம், பொங்கல் வைப்பது, அர்ச்சனை செய்வது, வஸ்திரங்கள் சார்த்துவது) வருடம் ஒரு முறையோ அல்லது முடிந்த போதோ செய்யலாம்.

நேரடியாக வந்து செய்ய முடியவில்லையென்றால், காணிக்கையை அனுப்பி வைக்கலாம்.













Sunday, 17 August 2014

பிள்ளையாரை வணங்குவோம்

முழு முதற்கடவுளான பிள்ளையாரை வணங்கி, இந்த வலைப் பதிவைத் தொடங்குகிறேன்.

ஓம் கணேசாய நமஹ!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!


பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடும் விதம் பற்றி:

பூஜை அறையை முதல் நாளே சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். படங்களைத் துடைத்து, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

விளக்கு, பூஜை பொருட்களை தேய்த்து, அலம்பி, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

பூஜைக்குத் தேவைப்படும் பொருட்களுக்கு ஒரு லிஸ்ட்:

சந்தனம், குங்குமம், பஞ்சுத் திரி, விளக்கேற்ற நல்லெண்ணெய் அல்லது நெய், விளக்கேற்ற தீப்பெட்டி, (ஊதுபத்தி, சாம்பிராணி, தசாங்கம் இவை கிடைத்தால்), உதிரிப் பூக்கள், (அருகம்புல் கிடைத்தால்) பூச்சரம் அல்லது பூமாலை, மஞ்சள் பொடி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், சூடன் அல்லது நெய் விளக்கு.

பூஜைக்குப் படைக்க:

வாழையிலை(கிடைத்தால்)
வெற்றிலை, பாக்கு,
பழ வகைகள்: வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை மற்றும் எல்லா வகைப் பழங்களும்.

பூஜைக்கான நைவேத்தியம்:

அவல், பொரி, பொரிகடலை, வெல்லம்
பாயசம்,
வடை
சுண்டல்
மோதகம் அல்லது பிடி கொழுக்கட்டை

பூஜை செய்யும் நேரம்:

சாதாரணமாக அதிகாலையில் செய்து விடுவது நல்லது. சூரியோதயத்துக்கு முன் பூஜை செய்வதென்றால் நேரம் பார்க்க வேண்டாம். 

விடிந்த பின் என்றால், ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரத்தில் செய்யலாம். எல்லா காலண்டரிலும் நல்ல நேரம் என்று போட்டிருப்பார்கள். அந்த நேரத்தில் செய்யலாம்.

மேலே சொல்லியிருக்கும் நைவேத்தியப் பொருட்கள் தவிர, நாம் தினசரி செய்யும் இட்லி, சட்னி, நெய், 

மதியத்துக்கு செய்யும், சாதம், பருப்பு, நெய், பொரியல், அவியல், சாம்பார், தயிர், அப்பளம் எல்லாம் படைக்க வேண்டும்.

தேவைப்படும் மளிகைப் பொருட்களுக்கு ஒரு லிஸ்ட்:

பச்சரிசி(சமையலுக்கும் பாயசத்துக்கும்)
துவரம்பருப்பு(சாம்பாருக்கு)
பச்சரிசி மாவு(கொழுக்கட்டைக்கு)
கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலை(சுண்டலுக்கு)
வெல்லம்(பாயசம் மற்றும் கொழுக்கட்டைக்கு)
தேங்காய்(படைக்க, மற்றும் கொழுக்கட்டை, பாயசம், சுண்டல், சமையலுக்கு)
ஏலக்காய்ப் பொடி, முந்திரிப்பருப்பு.
பால்(பாயசத்துக்கு)

மற்றபடி, காய்கறிகள் வீட்டில் இருக்கும் மளிகை சாமான்கள் சரி பார்த்துக் கொள்ளவும்.


காலையில் நாலு மணிக்கு எழுந்தால் சரியாக இருக்கும்.

தலைக்குக் குளித்து விட்டு, சமையலை ஆரம்பிக்கலாம்.

முதலில் சுண்டலுக்கு ஊறப் போடவும். ஒரு டம்ளர்(ஒரு கப்) கொண்டைக்கடலை அல்லது கடலைப்பருப்பை ஹாட்பேக்கில் போட்டு, வென்னீர் ஊற்றி மூடி வைக்கவும். ஹாட் பேக்கில் போடுவதால், ஒரு மணி நேரம் ஊறினால் போதும்.

இன்னொரு ஹாட் பேக்கில் வடைக்கு ஊறப் போடவும்.

பிறகு பாயசத்துக்கு பாசிப்பருப்பு, அரிசி வறுத்து, குக்கரில் வேக வைக்கவும். அரை கப் அரிசி, அரை கப் பாசிப்பருப்பு போதுமானதாக இருக்கும். அரிசி பருப்பு ஒரு பங்கு என்றால் வெல்லம் (மண்டை வெல்லத்தை கத்தியால், காய் நறுக்கும் போர்டில் வைத்து, சீவி வைக்கவும்) இரண்டு பங்கு.

களைந்து வைத்த அரிசி, பருப்பு குக்கரில் வெந்து கொண்டிருக்கும்போதே, வெல்லம் சீவி வைக்கலாம். பால் காய்ச்சி வைக்கலாம். தேங்காய் துருவி வைக்கலாம்.

இட்லி ஊற்றி வைத்து விட்டு, சட்னி அரைத்து வைத்து விடலாம்.

இதற்குள் குக்கர் விசில் விட்டு, (கூடுதலாக இரண்டு விசில் வைக்கலாம்), ஆறித் திறக்க முடியும். வெந்த அரிசி பருப்பை நன்றாக மசிக்கவும். வெல்லத்தை வென்னீர் ஊற்றி, கரைந்ததும், வடிகட்டி இதில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டியில்லாமல் கலந்து, பாலும் ஊற்றி, கொதிக்க விட்டு, ஏலக்காய்ப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு போட்டால், பாயசம் தயார்.

இதற்குள் பருப்பு நன்றாக ஊறியிருக்கும். அதை களைந்து, குக்கரில் வேக வைக்கலாம். கடலைப்பருப்பு என்றால் 2 விசில் போதும். கொண்டைக்கடலை என்றால், 4 விசில் வர வைக்கவும். கடலைப்பருப்பு சுண்டல் என்றால், குக்கரில் வேக வைக்காமல், பாத்திரத்திலேயே குழையாமல் வேக வைக்கலாம்.

கடலைப்பருப்பு சுண்டலுக்கு, வெந்த பருப்பை நீரை வடித்து விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய், இஞ்சி விழுது தாளித்து, வெந்த பருப்பைப் போட்டுக் கிளறி, உப்பும் தேங்காய்ப்பூவும் போட்டு இறக்கி வைக்கவும்.

கொண்டைக்கடலை சுண்டலுக்கு வெந்த பருப்பை நீரை வடித்து விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயப் பொடி, சிவப்பு மிளகாய் தாளித்து, வெந்த கடலையைப் போட்டுக் கிளறி, தேங்காய்ப் பூ சேர்க்கவும்.

சுண்டலும் தயார்.

கொழுக்கட்டை செய்முறை கீழே லிங்க் கொடுத்திருக்கிறேன்.


அரை மணி நேரம் ஆகலாம் இதை செய்வதற்கு.

பிறகு வடை தயார் செய்து கொள்ளலாம். நைவேத்தியத்துக்கு 5 அல்லது 7 அல்லது 9 கொழுக்கட்டைகள், வடைகள் தயார் செய்து விட்டு, பூஜை முடிந்த பிறகு கூட மீதியை செய்யலாம்.

காலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் சுண்டல், வடை, பாயசம், கொழுக்கட்டை தயாராகி விடும். இதோடு, இட்லி, சட்னியும் தயார்.

இதற்குள் பூஜை அலமாரியில் பிள்ளையார் படத்துக்கு பூச்சரம் அல்லது பூமாலை, மற்ற படங்களுக்கு பூ என்று அலங்கரிக்க வேண்டும்.

கொஞ்சம் மஞ்சள் பொடி எடுத்து, அதை மஞ்சள் பிள்ளையாராகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மஞ்சள் பிள்ளையாரை ஒரு வெற்றிலையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். அருகம்புல் கிடைத்தால் வைக்கலாம். 

இந்த மஞ்சள் பிள்ளையாரை பூஜை அலமாரியில் வைத்து, அதன் முன்னால், வாழையிலை (கிடைத்தால்) அல்லது ஒரு பெரிய தாம்பாளத்தில், வெற்றிலை, பாக்கு, பழங்கள், கிண்ணங்களில் வடை, பாயசம், சுண்டல், கொழுக்கட்டை, இட்லி, சட்னி (அவல், பொரி, கடலை, வெல்லம் கலந்து) என்று எல்லாவற்றையும் அழகாக, பக்தியுடன் படைக்கவும். 

ஊதுபத்தி ஏற்றி வைக்கலாமென்றால் ஏற்றி வைக்கவும்.

விளக்கேற்றவும். தீபாராதனைக்கு சூடம் ஏற்ற முடியாதென்றால், இன்னொரு அகல் விளக்கில் நெய் ஊற்றி, ஏற்றி வைத்துக் கொள்ளவும்.

பிள்ளையாரை மனதார வணங்கவும். தெரிந்த தமிழ்ப் பாடல்களில் பிள்ளையார் துதி சொல்லலாம்.

ஓம் கணேசாய நமஹ என்றும் சொல்லலாம். இருபத்து ஒரு முறை சொல்லலாம்.  குறைந்த பட்சம் மூன்று முறை சொல்லி வணங்கலாம்


சூட தீபாராதனை அல்லது நெய் தீப ஆராதனை காட்டவும்.

தேங்காய் உடைக்கவும். (தேங்காயைக் கழுவி விட்டு உடைத்தால், சரி பாதியாக உடையும்)

ஒரு தம்ளரில் தண்ணீர் பிடித்து வைத்திருக்க வேண்டும். அந்தத் தண்ணீரை சிறிது எடுத்து, நைவேத்தியப் பொருட்களை மூன்று முறை சுற்றி, நைவேத்தியம் செய்யவும். 

குடும்பத்தினர் அனைவரும் பிள்ளையாரை வணங்கவும்.

மதியம் செய்த சமையலை இதே போல, பிள்ளையாருக்குப் படைத்து, நீர் விளாவி, நைவேத்தியம் செய்யவும்.

சாயங்காலம் ஒரு முறை விளக்கேற்றி, பழமோ அல்லது கொஞ்சம் பொரியோ நைவேத்தியம் செய்யலாம்.

மறு நாள் காலையிலும் பழம் அல்லது பொரி நைவேத்தியம் செய்து, தீபாராதனை காட்டவும். 

பிள்ளையாரிடம் நம் வீட்டுக்கு வந்து நமது பூஜையை ஏற்றுக் கொண்டதற்காக மானசீகமாக நன்றி சொல்லி, ஒவ்வொரு வருடமும் இதே போல வீட்டுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்கவும்.

மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள்(செவ்வாய் வெள்ளியாக இல்லாமல் இருக்க வேண்டும்) மஞ்சள் பிள்ளையாரைக் கரைத்து, செடியில் ஊற்றி விடலாம்.(கால் படாத இடத்தில்).