Sunday, 17 August 2014

பிள்ளையாரை வணங்குவோம்

முழு முதற்கடவுளான பிள்ளையாரை வணங்கி, இந்த வலைப் பதிவைத் தொடங்குகிறேன்.

ஓம் கணேசாய நமஹ!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!


பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடும் விதம் பற்றி:

பூஜை அறையை முதல் நாளே சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். படங்களைத் துடைத்து, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

விளக்கு, பூஜை பொருட்களை தேய்த்து, அலம்பி, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

பூஜைக்குத் தேவைப்படும் பொருட்களுக்கு ஒரு லிஸ்ட்:

சந்தனம், குங்குமம், பஞ்சுத் திரி, விளக்கேற்ற நல்லெண்ணெய் அல்லது நெய், விளக்கேற்ற தீப்பெட்டி, (ஊதுபத்தி, சாம்பிராணி, தசாங்கம் இவை கிடைத்தால்), உதிரிப் பூக்கள், (அருகம்புல் கிடைத்தால்) பூச்சரம் அல்லது பூமாலை, மஞ்சள் பொடி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், சூடன் அல்லது நெய் விளக்கு.

பூஜைக்குப் படைக்க:

வாழையிலை(கிடைத்தால்)
வெற்றிலை, பாக்கு,
பழ வகைகள்: வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை மற்றும் எல்லா வகைப் பழங்களும்.

பூஜைக்கான நைவேத்தியம்:

அவல், பொரி, பொரிகடலை, வெல்லம்
பாயசம்,
வடை
சுண்டல்
மோதகம் அல்லது பிடி கொழுக்கட்டை

பூஜை செய்யும் நேரம்:

சாதாரணமாக அதிகாலையில் செய்து விடுவது நல்லது. சூரியோதயத்துக்கு முன் பூஜை செய்வதென்றால் நேரம் பார்க்க வேண்டாம். 

விடிந்த பின் என்றால், ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரத்தில் செய்யலாம். எல்லா காலண்டரிலும் நல்ல நேரம் என்று போட்டிருப்பார்கள். அந்த நேரத்தில் செய்யலாம்.

மேலே சொல்லியிருக்கும் நைவேத்தியப் பொருட்கள் தவிர, நாம் தினசரி செய்யும் இட்லி, சட்னி, நெய், 

மதியத்துக்கு செய்யும், சாதம், பருப்பு, நெய், பொரியல், அவியல், சாம்பார், தயிர், அப்பளம் எல்லாம் படைக்க வேண்டும்.

தேவைப்படும் மளிகைப் பொருட்களுக்கு ஒரு லிஸ்ட்:

பச்சரிசி(சமையலுக்கும் பாயசத்துக்கும்)
துவரம்பருப்பு(சாம்பாருக்கு)
பச்சரிசி மாவு(கொழுக்கட்டைக்கு)
கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலை(சுண்டலுக்கு)
வெல்லம்(பாயசம் மற்றும் கொழுக்கட்டைக்கு)
தேங்காய்(படைக்க, மற்றும் கொழுக்கட்டை, பாயசம், சுண்டல், சமையலுக்கு)
ஏலக்காய்ப் பொடி, முந்திரிப்பருப்பு.
பால்(பாயசத்துக்கு)

மற்றபடி, காய்கறிகள் வீட்டில் இருக்கும் மளிகை சாமான்கள் சரி பார்த்துக் கொள்ளவும்.


காலையில் நாலு மணிக்கு எழுந்தால் சரியாக இருக்கும்.

தலைக்குக் குளித்து விட்டு, சமையலை ஆரம்பிக்கலாம்.

முதலில் சுண்டலுக்கு ஊறப் போடவும். ஒரு டம்ளர்(ஒரு கப்) கொண்டைக்கடலை அல்லது கடலைப்பருப்பை ஹாட்பேக்கில் போட்டு, வென்னீர் ஊற்றி மூடி வைக்கவும். ஹாட் பேக்கில் போடுவதால், ஒரு மணி நேரம் ஊறினால் போதும்.

இன்னொரு ஹாட் பேக்கில் வடைக்கு ஊறப் போடவும்.

பிறகு பாயசத்துக்கு பாசிப்பருப்பு, அரிசி வறுத்து, குக்கரில் வேக வைக்கவும். அரை கப் அரிசி, அரை கப் பாசிப்பருப்பு போதுமானதாக இருக்கும். அரிசி பருப்பு ஒரு பங்கு என்றால் வெல்லம் (மண்டை வெல்லத்தை கத்தியால், காய் நறுக்கும் போர்டில் வைத்து, சீவி வைக்கவும்) இரண்டு பங்கு.

களைந்து வைத்த அரிசி, பருப்பு குக்கரில் வெந்து கொண்டிருக்கும்போதே, வெல்லம் சீவி வைக்கலாம். பால் காய்ச்சி வைக்கலாம். தேங்காய் துருவி வைக்கலாம்.

இட்லி ஊற்றி வைத்து விட்டு, சட்னி அரைத்து வைத்து விடலாம்.

இதற்குள் குக்கர் விசில் விட்டு, (கூடுதலாக இரண்டு விசில் வைக்கலாம்), ஆறித் திறக்க முடியும். வெந்த அரிசி பருப்பை நன்றாக மசிக்கவும். வெல்லத்தை வென்னீர் ஊற்றி, கரைந்ததும், வடிகட்டி இதில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டியில்லாமல் கலந்து, பாலும் ஊற்றி, கொதிக்க விட்டு, ஏலக்காய்ப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு போட்டால், பாயசம் தயார்.

இதற்குள் பருப்பு நன்றாக ஊறியிருக்கும். அதை களைந்து, குக்கரில் வேக வைக்கலாம். கடலைப்பருப்பு என்றால் 2 விசில் போதும். கொண்டைக்கடலை என்றால், 4 விசில் வர வைக்கவும். கடலைப்பருப்பு சுண்டல் என்றால், குக்கரில் வேக வைக்காமல், பாத்திரத்திலேயே குழையாமல் வேக வைக்கலாம்.

கடலைப்பருப்பு சுண்டலுக்கு, வெந்த பருப்பை நீரை வடித்து விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய், இஞ்சி விழுது தாளித்து, வெந்த பருப்பைப் போட்டுக் கிளறி, உப்பும் தேங்காய்ப்பூவும் போட்டு இறக்கி வைக்கவும்.

கொண்டைக்கடலை சுண்டலுக்கு வெந்த பருப்பை நீரை வடித்து விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயப் பொடி, சிவப்பு மிளகாய் தாளித்து, வெந்த கடலையைப் போட்டுக் கிளறி, தேங்காய்ப் பூ சேர்க்கவும்.

சுண்டலும் தயார்.

கொழுக்கட்டை செய்முறை கீழே லிங்க் கொடுத்திருக்கிறேன்.


அரை மணி நேரம் ஆகலாம் இதை செய்வதற்கு.

பிறகு வடை தயார் செய்து கொள்ளலாம். நைவேத்தியத்துக்கு 5 அல்லது 7 அல்லது 9 கொழுக்கட்டைகள், வடைகள் தயார் செய்து விட்டு, பூஜை முடிந்த பிறகு கூட மீதியை செய்யலாம்.

காலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் சுண்டல், வடை, பாயசம், கொழுக்கட்டை தயாராகி விடும். இதோடு, இட்லி, சட்னியும் தயார்.

இதற்குள் பூஜை அலமாரியில் பிள்ளையார் படத்துக்கு பூச்சரம் அல்லது பூமாலை, மற்ற படங்களுக்கு பூ என்று அலங்கரிக்க வேண்டும்.

கொஞ்சம் மஞ்சள் பொடி எடுத்து, அதை மஞ்சள் பிள்ளையாராகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மஞ்சள் பிள்ளையாரை ஒரு வெற்றிலையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். அருகம்புல் கிடைத்தால் வைக்கலாம். 

இந்த மஞ்சள் பிள்ளையாரை பூஜை அலமாரியில் வைத்து, அதன் முன்னால், வாழையிலை (கிடைத்தால்) அல்லது ஒரு பெரிய தாம்பாளத்தில், வெற்றிலை, பாக்கு, பழங்கள், கிண்ணங்களில் வடை, பாயசம், சுண்டல், கொழுக்கட்டை, இட்லி, சட்னி (அவல், பொரி, கடலை, வெல்லம் கலந்து) என்று எல்லாவற்றையும் அழகாக, பக்தியுடன் படைக்கவும். 

ஊதுபத்தி ஏற்றி வைக்கலாமென்றால் ஏற்றி வைக்கவும்.

விளக்கேற்றவும். தீபாராதனைக்கு சூடம் ஏற்ற முடியாதென்றால், இன்னொரு அகல் விளக்கில் நெய் ஊற்றி, ஏற்றி வைத்துக் கொள்ளவும்.

பிள்ளையாரை மனதார வணங்கவும். தெரிந்த தமிழ்ப் பாடல்களில் பிள்ளையார் துதி சொல்லலாம்.

ஓம் கணேசாய நமஹ என்றும் சொல்லலாம். இருபத்து ஒரு முறை சொல்லலாம்.  குறைந்த பட்சம் மூன்று முறை சொல்லி வணங்கலாம்


சூட தீபாராதனை அல்லது நெய் தீப ஆராதனை காட்டவும்.

தேங்காய் உடைக்கவும். (தேங்காயைக் கழுவி விட்டு உடைத்தால், சரி பாதியாக உடையும்)

ஒரு தம்ளரில் தண்ணீர் பிடித்து வைத்திருக்க வேண்டும். அந்தத் தண்ணீரை சிறிது எடுத்து, நைவேத்தியப் பொருட்களை மூன்று முறை சுற்றி, நைவேத்தியம் செய்யவும். 

குடும்பத்தினர் அனைவரும் பிள்ளையாரை வணங்கவும்.

மதியம் செய்த சமையலை இதே போல, பிள்ளையாருக்குப் படைத்து, நீர் விளாவி, நைவேத்தியம் செய்யவும்.

சாயங்காலம் ஒரு முறை விளக்கேற்றி, பழமோ அல்லது கொஞ்சம் பொரியோ நைவேத்தியம் செய்யலாம்.

மறு நாள் காலையிலும் பழம் அல்லது பொரி நைவேத்தியம் செய்து, தீபாராதனை காட்டவும். 

பிள்ளையாரிடம் நம் வீட்டுக்கு வந்து நமது பூஜையை ஏற்றுக் கொண்டதற்காக மானசீகமாக நன்றி சொல்லி, ஒவ்வொரு வருடமும் இதே போல வீட்டுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்கவும்.

மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள்(செவ்வாய் வெள்ளியாக இல்லாமல் இருக்க வேண்டும்) மஞ்சள் பிள்ளையாரைக் கரைத்து, செடியில் ஊற்றி விடலாம்.(கால் படாத இடத்தில்).




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.