Saturday, 25 April 2015

வடகம் போடலாமா

வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு, வருடம் முழுவதற்கும் தேவையான வற்றல் வடகம் போட்டு , எடுத்து வைக்க வேண்டும்.

ஏற்கனவே அறுசுவையில் புகைப்படங்களோடு கூழ் வடகம் குறிப்புகள் கொடுத்திருக்கிறேன்.

லிங்க் இதோ!

சுலப வடகம்

மேலே கொடுத்திருக்கும் வடகம், பச்சரிசியையும் ஜவ்வரிசியையும் வேக வைத்து, செய்யும் முறை.

இந்த வடகம், வீசிப் பொரியாது, ஆனால் சாப்பிடும்போது, மொறுமொறுப்பாக இருக்கும். கருகி விடாமல், கவனமாகப் பொரிக்க வேண்டும்.

நம் வீட்டில் எப்போதும் செய்யும் பிழியும் வடகக் குறிப்புக்கான லிங்க் இங்கே:

கூழ் வடகம்(உழக்கில்பிழியும் முறை)

மேலே சொல்லியிருக்கும் குறிப்பில், குக்கரில் வேக வைக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆனால், இந்த முறை வடகம் போடும்போது நான் கற்றுக் கொண்டது - வடக மாவை - நான் ஸ்டிக் பாத்திரத்தில்(அகலமான மற்றும் உயரமான பாத்திரம்)கிளறினால், சூப்பராக வெந்து விடுகிறது.

துளிக் கூட அடி பிடிக்கவில்லை. வெகு சீக்கிரம் வெந்து விடுகிறது. மரச் சட்டுவத்தால் கிளறி வேக விடுவது சுலபமாக இருக்கிறது.

வடகம் பொரித்தால் அப்படி ஒரு மொறு மொறுப்பு!

இதே கூழ் வடக மாவில், சின்ன வெங்காயத்தை அரிந்து, கலந்து, கிள்ளி வைக்கலாம். முக்கால் படி அரிசி அரைத்த வடக மாவுக்கு, குறைந்தது கால் படியாவது உரித்த வெங்காயம் வேண்டும்.

சின்ன வெங்காயத்தை உரிக்கும்போது, ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் உரிக்காத வெங்காயங்களைப் போட்டு, எடுத்து உரித்தால், கண் கரிக்காது.

உரித்த வெங்காயங்களை - கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி எடுத்தால், ஒன்று போல வரும். பொடியாக நறுக்க சிரமப்பட வேண்டாம்.

வெங்காய கறி வடகக் குறிப்பு இதோ

:வெங்காய கறி வடகம்(குழம்புக்கு தாளிக்க/தொட்டுக் கொள்ள)

வெயில் காலம் என்பது சித்திரை பிறந்த பிறகு என்று காத்திருக்க வேண்டாம்.

மாசி மாதம் - மகா சிவராத்திரி முடிந்து விட்டாலே, வடகம் போடும் வேலைகளைத் தொடங்கி விடலாம்.

அக்னி நட்சத்திர காலங்களில் மிக அதிகமாக வெயில் அடிக்கும் நேரத்தில் வடகம் போட்டால், வடகம் சிவந்து விடும் என்று சொல்வார்கள்.

அதே போல - மே மாதத்துக்குப் பிறகு - வெயில் அடித்தாலுமே, காற்றும் ஆரம்பித்து விடும். பிழிந்த வடகம் வெயிலில் காயும்போது, தூசி விழ வாய்ப்புகள் உண்டு.

இலை வடகம் என்று சொல்லப்படும் மெலிதான - அள்ளி ஊற்றும் முறையிலான வடகக் குறிப்பு இங்கே:

இலை வடகம்(அள்ளி ஊற்றும் முறை)

இந்த வடகத்தில் ஜவ்வரிசி சேர்க்காமலும் செய்யலாம்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.