கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று, திருக் கார்த்திகை - தீபத் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
கார்த்திகை மாதம் என்பது - நவம்பர் - டிசம்பர் மாதத்தில் வரும். காலண்டரைப் பார்த்து, கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்தே, தினமும் மாலையில் விளக்கேற்றியதும், ஒன்று அல்லது இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி, வாசல் நிலைப்படியில் ஒரு பக்கமாக அல்லது இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும்.
சிலர் மாதப் பிறப்புக்கு முதல் நாளிலிருந்தே வாசலில் ஒரு விளக்கு தினமும் ஏற்றி வைப்பார்கள்.
கார்த்திகைப் பண்டிகைக்கு முதல் நாள் பரணி தீபம் என்று கொண்டாட வேண்டும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பரணி தீபம் அன்று, தினமும் வாசலில் வைக்கும் தீபங்களுடன் கூடுதலாக சில தீபங்கள் ஏற்றி, வாசலில் கோலம் போட்டு, அதன் மேல் அழகாக வைக்கலாம்.
பரணி தீபத்தை மோட்ச தீபம் என்றும் சொல்வார்கள். சில வீடுகளில், வீட்டில் இருக்கும் வயதானவர்கள், தினம் ஒரு திரி என்ற கணக்கில், 365 திரிகள் திரித்து வைத்து, அதை ஒரு பெரிய அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி, 365 திரிகளைப் போட்டு ஏற்றி வைப்பார்கள்.
கார்த்திகை தீபத்தன்று, காலையில் சீக்கிரம் எழுந்து, வீட்டில் இருக்கும் பெரிய விளக்குகள், அகல் விளக்குகள் எல்லாவற்றையும் கழுவி, காய வைத்து, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.
பெரிய விளக்கு - 4 அல்லது 5 முகம் கொண்ட விளக்குகளில் - எல்லாப் பக்கமும் திரிகள் போட வேண்டும்.
எல்லா விளக்குகளுக்குமே - இரண்டு திரிகள் போட வேண்டும்.
பூஜை அறையில் - சுவாமி படங்களைத் துடைத்து, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.
பூஜை அறையின் கதவில் அல்லது வீட்டு வாசல் கதவில் - கரைத்த பச்சரிசி மாவில் கையை நனைத்து, அச்சுப் பதிப்பது உண்டு.
அதே போல, பூஜை அறையிலும் - அலமாரியின் முன்னால், பாதங்கள் வரைவது உண்டு.
மஹாபலி அரசர் கார்த்திகை அன்று, வீட்டுக்கு வருவதாக, பெரியவர்கள் சொல்வார்கள். அதன் அடையாளமாக இப்படி கோலமிடுவது வழக்கம்.
பூஜைக்கான பொருட்கள் - சந்தனம், குங்குமம், விபூதி, பூ, தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, சூடன், சாம்பிராணி, தசாங்கம், எல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
பூஜைக்கான நைவேத்தியங்கள்:
பொரி உருண்டை, அப்பம், மாவிளக்கு, பச்சரிசி மாவு விளக்கும் அடையும் மற்றும் கொழுக்கட்டையும்.
பொரி உருண்டை -
செய்முறை:
அல்லது கடைகளில் கிடைக்கும் பொரி உருண்டைகள் வாங்கிக் கொள்ளலாம்.
மாவிளக்கு:
செய்முறை:
மாவிளக்கில் வெல்லம் சேர்த்துப் பிசைந்து, சிறிது நேரத்தில் நன்றாக இளகி விடும். அதனால், தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம். விளக்கேற்றும் நேரத்தில், சரியான பதத்தில் செய்து கொள்ளவும். இளகி, நீர் விட்டால், இலையில் வைக்கும்போது, உருகி ஓடும் பதத்தில் ஆகி விடும். கவனமாக செய்யவும்.
மாவிளக்கை செய்து, அதன் நடுவில் - விரலால் பள்ளம் செய்து, அதில் உருக்கிய நெய்யை ஊற்றவும். திரி போடவும். மாவிளக்குக்கு சந்தனம் குங்குமம் வைக்கவும். பூஜையின் போது மற்ற விளக்குக்களை ஏற்றும் போது, இந்த மாவிளக்கையும் ஏற்றவும்.
அப்பம் செய்முறை:
கோதுமை மாவு, வெல்லம் கரைத்து, பணியார சட்டியில் ஊற்றியும் எடுக்கலாம்.
பச்சரிசி மாவு கொழுக்கட்டை:
செய்முறை:
மேலே உள்ள குறிப்பில் சொல்லியிருப்பது போல, பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து, பிசைந்து கொள்ளவும். சின்ன சின்னதாக, விரல் நீளத்தில் கொழுக்கட்டைகள் செய்து கொள்ளவும்.
எலுமிச்சம்பழ அளவில் 30 உருண்டைகள் உருட்டிக் கொள்ளவும்.
12 உருண்டைகளை, தட்டு போல செய்து கொள்ளவும்.
இன்னும் 12 உருண்டைகள் எடுத்து, அகல் விளக்கு போல(சிறிது குழியாக - 2 அல்லது 1 ஸ்பூன் நெய் கொள்ளும் அளவுக்கு) செய்து கொள்ளவும்.
கொழுக்கட்டைகள், தட்டு(அடை), விளக்குகள் இவற்றை - கொஞ்சம் கொஞ்சமாக, இட்லித் தட்டில் வைத்து, வேக வைத்து, எடுத்து வைக்கவும்.
12 விளக்குகள் செய்ய 24 உருண்டைகள் போதும். இருந்தாலும், வேக வைத்து எடுக்கும்போது, சில விளக்குகள் சரியாக வரவில்லையென்றால், கூடுதலாகத் தேவைப்படும். அதற்காகத்தான் 30 உருண்டைகள் செய்து கொள்ளவும்.
மேலே சொன்ன அளவுக்கு செய்ய அரை கிலோ பச்சரிசி மாவு தேவைப்படும்.
ஒரு தாம்பாளத்தில் வெந்த கொழுக்கட்டைகளை பரப்பி, அதன் மேல் கொழுக்கட்டை அடைகளையும் விளக்குகளையும் அழகாக வைக்கவும். சிறிது குங்குமம் வைக்கவும்.
எல்லா விளக்குகளிலும் உருக்கிய நெய் ஊற்றி, திரி போட்டு வைக்கவும்.
பூஜையின் போது, இந்த விளக்குகளையும் ஏற்றவும்.
கார்த்திகை அன்று, காலையில் இருந்தே, வேலைகள் சரியாக இருக்கும்.
பெண்கள், குழந்தைகள் - நல்ல பட்டாடைகள் உடுத்தி, நகைகள் போட்டு, தலையில் பூ வைத்துக் கொள்ளவும்.
பூஜை அறையில், மேலும் சில கோலங்கள் போட்டு, விளக்குகளை அழகாக, தயாராக வைக்கவும்.
ஒரு வாழை இலையில், ஒரு வெற்றிலையின் மேல் - மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, சந்தனம், குங்குமம், பூ, வைக்கவும்.
நைவேத்தியப் பொருட்கள், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் இவற்றையும் வைக்கவும்.
சிறிய தீபங்களை தாம்பாளங்களில் தயாராக வைக்கவும்.
எல்லா விளக்குகளையும் பொறுமையாக ஏற்றவும். மாலை ஐந்து அல்லது ஐந்தரைக்கு ஏற்ற ஆரம்பித்தால், சரியாக இருக்கும்.
மாவிளக்குகளையும் ஏற்றவும்.
தேங்காய் உடைத்து, தூபம், தீபம், காட்டி, நைவேத்தியம் செய்யவும்.
வீட்டில் உள்ள எல்லா விளக்குகளையும் போட்டு வைக்கவும்.
எல்லா ஹால்களிலும் அங்கங்கே கோலங்கள் போட்டு, அவற்றில் விளக்குகள் வைக்கவும்.
வாசலிலும் போட்டு வைத்திருக்கும் கோலங்களின் மேல், விளக்குகளை வைக்கவும்.
மத்தாப்புகள் இருந்தால், குழந்தைகள் அவற்றை ஏற்றி, மகிழலாம்.
தீபங்கள் ஏற்றும் போது, தரையில் எண்ணெய் சிந்தியிருந்தால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அதே போல, குழந்தைகளும் தீபங்களில் சுட்டுக் கொள்ளாமல், கவனமாக இருக்க வேண்டும்.
நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு பிரசாதம் கொடுக்கவும்.
மறு நாள் - மிச்ச கார்த்திகை என்று சொல்வார்கள். சில விளக்குகளை மட்டும் வாசலில் ஏற்றி வைக்கலாம்.
மேலே சொன்ன எல்லா நைவேத்தியங்களும் செய்ய முடியா விட்டால், சிலவற்றை மட்டும் செய்து கொள்ளலாம்.
அமெரிக்காவில் தேங்காய் உடைப்பது இயலவில்லையென்றால், வெற்றிலை, பாக்கு, பழம் இவற்றைப் படைத்து, வணங்கலாம்.
நம்மால் முடிந்ததை செய்வது சிறப்பு.
தீபம் ஏற்றுவோம்! தீப ஒளியை வணங்குவோம்!! சிறப்பும் செல்வமும் பெறுவோம்!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.