சரஸ்வதி பூஜை:
ஒன்பது நாட்களும் கொலு வைப்பது நமது விருப்பம், வீட்டுப் பழக்கம் போல செய்யலாம்.
மஹா நவமி என்னும் சரஸ்வதி பூஜையை, சிறப்பாக செய்ய வேண்டும்.
முந்தைய பதிவான பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் பதிவில் சொல்லியிருப்பதைப் போன்று, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.
கறுப்பு கலக்காத புதிய ரவிக்கைத் துணியை, அணிவிக்க வேண்டும்.
புத்தகங்கள், பென்சில், பேனாக்கள் போன்றவற்றை அடுக்கி, அதன் மேல், புதிய ரவிக்கைத் துணி(வெள்ளையில் பூப்போட்டதும் போடலாம்) விரித்து, அதன் மேல், வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் வைக்கலாம்.
இத்துடன் சிறிய கலசம் வைக்கலாம்.(விருப்பமிருந்தால்)
கலசம் வைக்கும் முறை:(பழக்கம்/விருப்பம் இருந்தால் மட்டும்)
ஒரு செம்பில் நீர் அல்லது பச்சரிசி நிரப்ப வேண்டும்.
கிராம்பு ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களை உள்ளே போட வேண்டும்.
தங்கம், வெள்ளி, நாணயங்களும் போடலாம்.
இதன் மேல் வெற்றிலை அல்லது மாவிலையை சுற்றி வர அழகாக அமைக்க வேண்டும்.
ஒரு தேங்காயை குடுமியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டுப் பிசைந்து, தேங்காயின் மேல் முகம் மாதிரி வைக்க வேண்டும்.
இரண்டு பூண்டுப் பற்களை, கண்கள் மாதிரி வைக்கலாம்
இரண்டு மிளகு எடுத்து, பூண்டுப் பற்களின் நடுவில் வைக்கலாம்.
இந்தத் தேங்காயை, கலசத்தின் மீது(குடுமி பகுதி மேல் நோக்கி இருக்குமாறு) வைக்க வேண்டும்.
மஞ்சளின் நடுவில் மூக்கு மாதிரி செய்து, மூக்குத்தி போல சிறிய கற்கள் வைக்கலாம்.
விரும்பினால், தங்க செயின்கள் அல்லது முத்து மாலைகள் அணிவித்து, அழகு படுத்தலாம்.
பூக்கள் வைக்க வேண்டும்.
கலசம் வைக்கும் பழக்கம் இல்லையென்றால், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, பூஜை செய்யலாம்.
வீட்டுக் கதவுகள், டி.வி. ஃப்ரிட்ஜ், அடுப்பு, கார் எல்லாவற்றுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, பூ வைக்கலாம்.
இசை வாத்தியங்கள்(வயலின்/வீணை/கிடார் போன்றவை) இவற்றுக்கும் சந்தனம், குங்குமம், பூ வைக்கலாம்.
நைவேத்தியங்கள், பூஜைகள் முந்தைய பதிவில் சொன்னது போல(கொழுக்கட்டை தவிர) வடை, பாயசம், சுண்டல் எல்லாம் செய்து படைக்கலாம். பழங்கள் படைக்கலாம்.
மறு நாள் விஜய தசமியன்று, விளக்கேற்றி, ஏதேனும் நைவேத்தியம் செய்து விட்டு, வீட்டுப் பெரியவர்கள் அல்லது வீட்டுத் தலைவர்/தலைவியைக் கொண்டு, புத்தகங்கள், மஞ்சள் பிள்ளையார், கலசம் இவற்றை லேசாக வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும்.
கலச நீரை வீட்டில் தெளிக்கலாம் அல்லது கால் படாத இடத்தில், பூச்செடிகளின் அடியில் ஊற்றலாம். மஞ்சள் பிள்ளையாரையும் அதே போல, கால் படாத இடத்தில், பூச்செடிகள் இருக்கும் இடத்தில் கரைக்கலாம்.
விஜய தசமியன்று புதிய கலைகளைக் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு புதிய பாடங்கள் ஆரம்பிக்கலாம்.
குழந்தைகள் கல்வியில், ஞானத்தில் சிறந்து விளங்க, குமரகுருபரர் அருளிய ‘சகலகலாவல்லி மாலை’ என்ற பாடலை பெற்றோர்களும் குழந்தைகளும் படிக்கலாம்.
கல்வி, படிப்பில் சிறந்து விளங்க குமரகுருபரர் அருளிய ‘சகலகலாவல்லி மாலை’
சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் இதைக் கேட்க, லிங்க் தருகிறேன்.
தினமும் ஒலிக்கச் செய்து கேட்கலாம்.
https://www.youtube.com/watch?v=ZG4FoZ7S-ak
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.