Sunday, 1 February 2015

பொங்கலோ பொங்கல்!!! சிறு வீட்டுப் பொங்கல்!!

தை மாதம் முதல் தேதி பொங்கலைக் கொண்டாடுகிறோம்.

ஜனவரி 14 அல்லது 15ல் இந்த நாள் வரும்.

சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக அமைகிறது இந்தப் பண்டிகை.

நம் வீடுகளைப் பொறுத்த வரையில், வருடம் ஒரு முறை, வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து, பொங்கலுக்கு முதல் நாள் கோலங்கள் இட்டு, வீட்டை அழகுபடுத்தி, பொங்கலன்று அதிகாலையில் மூன்று பானைகள் பொங்கலிட்டுப் படைப்பதை வழக்கமாக செய்வதுண்டு.

மார்கழி மாதம் பிறந்ததுமே பொங்கல் வேலைகள் ஆரம்பமாகி விடும்.

மார்கழி மாதத்தில், அதிகாலையில் எழுந்து, தினமும் வாசலில் பெரிய கோலங்கள், கலர்ப் பொடி வைத்துப் போடுவது உண்டு.

கோலத்தின் நடுவில் சாண உருண்டை வைத்து, அதன் நடுவில் பூசணிப் பூவை சொருகி வைப்பார்கள்.

அதிகாலையில் வாசல் படியருகே ஒரு அகல் விளக்கை ஏற்றி வைப்பதும் உண்டு.

சாயங்காலம் ஆனதும், பூசணிப்பூவின் இதழ்களை வெளிப்பக்கமாகப் பிரித்து, சாண உருண்டையுடன் சேர்த்து, பூ வரட்டியாகத் தட்டி, காய வைப்பார்கள்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில், சிறு வீட்டுப் பொங்கல் என்று கொண்டாடுவார்கள்.

பொங்கலன்றே அல்லது, தைப்பூசத்துக்கு முன்னால், ஒரு நல்ல நாளில், இதைச் செய்வார்கள்.

மண்ணினாலோ அல்லது செம்மண்/கோலப் பொடியைக் கொண்டு, சிறு வீடு வரைந்து, ஒரு சிறிய பானையில் சர்க்கரைப் பொங்கல் வைப்பார்கள்.

வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, பூ தைத்து, பட்டுப் பாவாடை சட்டை அணிவிப்பார்கள். நகைகள் அணிவித்து, அலங்காரம் செய்வார்கள்.

பொங்கலுடன் சித்ரான்னங்கள் செய்து, உறவினர்கள்/நண்பர்களை அழைத்துக் கொண்டு, ஆற்றங்கரைக்கு அனைவரும் செல்வார்கள்.

ஆற்றங்கரையில் பெண்கள் கும்மிப் பாட்டு பாடி, கும்மி அடிப்பார்கள்.

பிறகு, காய வைத்திருக்கும் பூ வரட்டிகளை ஆற்றில் விடுவார்கள்.

சிறிய வாழை இலைத் துண்டுகளில் சிறிது பொங்கல் வைத்து, அவற்றையும் ஆற்றில் விடுவார்கள்.

எல்லோரும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்து விட்டு, வீடு திரும்புவார்கள்.

 கெட் டு கெதர்/பார்ட்டி போல இருக்கிறதே என்று தோன்றுகிறதா?

அதேதான். இந்த மாதிரி ஒரு அவுட்டிங் -  வீட்டிலேயே வேலை செய்து, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு அவசியம்தானே. அதனால் பண்டிகைக் கொண்டாட்டத்தையே ஒரு நல்ல அவுட்டிங்/கெட் டு கெதர்/பார்ட்டி ஆக்கி, கொண்டாடி இருக்கிறார்கள் அந்த நாட்களில்.