Saturday, 31 January 2015

சரஸ்வதி பூஜை முறைகள்

சரஸ்வதி பூஜை:

ஒன்பது நாட்களும் கொலு வைப்பது நமது விருப்பம், வீட்டுப் பழக்கம் போல செய்யலாம்.

 மஹா நவமி என்னும் சரஸ்வதி பூஜையை, சிறப்பாக செய்ய வேண்டும்.

முந்தைய பதிவான பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் பதிவில் சொல்லியிருப்பதைப் போன்று, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.




கறுப்பு கலக்காத புதிய ரவிக்கைத் துணியை, அணிவிக்க வேண்டும்.

புத்தகங்கள், பென்சில், பேனாக்கள் போன்றவற்றை அடுக்கி, அதன் மேல், புதிய ரவிக்கைத் துணி(வெள்ளையில் பூப்போட்டதும் போடலாம்) விரித்து, அதன் மேல், வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் வைக்கலாம்.

இத்துடன் சிறிய கலசம் வைக்கலாம்.(விருப்பமிருந்தால்)

கலசம் வைக்கும் முறை:(பழக்கம்/விருப்பம் இருந்தால் மட்டும்)

ஒரு செம்பில் நீர் அல்லது பச்சரிசி நிரப்ப வேண்டும்.

கிராம்பு ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களை உள்ளே போட வேண்டும்.

தங்கம், வெள்ளி, நாணயங்களும் போடலாம்.

இதன் மேல் வெற்றிலை அல்லது மாவிலையை சுற்றி வர அழகாக அமைக்க வேண்டும்.

ஒரு தேங்காயை குடுமியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டுப் பிசைந்து, தேங்காயின் மேல் முகம் மாதிரி வைக்க வேண்டும்.

இரண்டு பூண்டுப் பற்களை, கண்கள் மாதிரி வைக்கலாம்

இரண்டு மிளகு எடுத்து, பூண்டுப் பற்களின் நடுவில் வைக்கலாம்.

இந்தத் தேங்காயை, கலசத்தின் மீது(குடுமி பகுதி மேல் நோக்கி இருக்குமாறு) வைக்க வேண்டும்.

மஞ்சளின் நடுவில் மூக்கு மாதிரி செய்து, மூக்குத்தி போல சிறிய கற்கள் வைக்கலாம்.

விரும்பினால், தங்க செயின்கள் அல்லது முத்து மாலைகள் அணிவித்து, அழகு படுத்தலாம்.

பூக்கள் வைக்க வேண்டும்.

கலசம் வைக்கும் பழக்கம் இல்லையென்றால், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, பூஜை செய்யலாம்.

வீட்டுக் கதவுகள், டி.வி. ஃப்ரிட்ஜ், அடுப்பு, கார் எல்லாவற்றுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, பூ வைக்கலாம்.

இசை வாத்தியங்கள்(வயலின்/வீணை/கிடார் போன்றவை) இவற்றுக்கும் சந்தனம், குங்குமம், பூ வைக்கலாம்.

நைவேத்தியங்கள், பூஜைகள் முந்தைய பதிவில் சொன்னது போல(கொழுக்கட்டை தவிர) வடை, பாயசம், சுண்டல் எல்லாம் செய்து படைக்கலாம். பழங்கள் படைக்கலாம்.

மறு நாள் விஜய தசமியன்று, விளக்கேற்றி, ஏதேனும் நைவேத்தியம் செய்து விட்டு, வீட்டுப் பெரியவர்கள் அல்லது வீட்டுத் தலைவர்/தலைவியைக் கொண்டு, புத்தகங்கள், மஞ்சள் பிள்ளையார், கலசம் இவற்றை லேசாக வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும்.

கலச நீரை வீட்டில் தெளிக்கலாம் அல்லது கால் படாத இடத்தில், பூச்செடிகளின் அடியில் ஊற்றலாம். மஞ்சள் பிள்ளையாரையும் அதே போல, கால் படாத இடத்தில், பூச்செடிகள் இருக்கும் இடத்தில் கரைக்கலாம்.

விஜய தசமியன்று புதிய கலைகளைக் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு புதிய பாடங்கள் ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் கல்வியில், ஞானத்தில் சிறந்து விளங்க, குமரகுருபரர் அருளிய ‘சகலகலாவல்லி மாலை’ என்ற பாடலை பெற்றோர்களும் குழந்தைகளும் படிக்கலாம்.

கல்வி, படிப்பில் சிறந்து விளங்க குமரகுருபரர் அருளிய ‘சகலகலாவல்லி மாலை’

சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் இதைக் கேட்க, லிங்க் தருகிறேன்.

தினமும் ஒலிக்கச் செய்து கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=ZG4FoZ7S-ak

அபிஷேகப் பொருட்களும் அவற்றின் பயன்களும்

அபிஷேகப் பொருட்களும் அவற்றின் பயன்களும் பற்றி, விவரங்கள் தந்திருக்கிறேன். பார்க்கவும்.
 
இது தவிர, மதுரையில் உள்ள “இம்மையில் நன்மை தருவார் கோயில்” சென்ற போது, அங்கு உள்ள போர்டில், சிவனுக்கு தேங்காய்ப் பூ அபிஷேகம் செய்தால், அரசுப் பதவி கிடைக்கும் என்று எழுதிப் போட்டிருந்ததை ஒரு முறை பார்த்தேன்.  அந்தக் கோவிலுக்குச் சென்றால், பார்க்கவும்.



 
 
அபிஷேகப் பொருட்களும் அவற்றின் பயன்களும்
 
ஸ்ரீ வினாயாகருக்கு சங்கடஹர சதுர்த்தியின் போதும், சிவலிங்கத்துக்கு பிரதோஷத்தின் போதும், பௌர்ணமியின் போது, மற்றும் வழிபடும் விசேஷ தினங்களில் - தெய்வங்களுக்கு கீழ்க் காணும் பொருட்களை அபிஷேகம் செய்வதனால் கிடைக்கும் பலன்கள்:
 
மஞ்சள் பொடி           =இராஜ வசியம் தரும்
நல்ல தண்ணீர்     = ஒழுக்கத்தைத் தரும், சாந்தி உண்டாகும்
நல்லெண்ணெய், தேன், வாசனைத் தைலம், பச்சைக் கற்பூரம் =
                    விஷ ஜுர நிவர்த்தி, சுகத்தைக் கொடுக்கும்
பச்சரிசி மாவு      = கடனைப் போக்கும்
நெல்லிப்பருப்பு பொடி, புஷ்பங்கள் = சோகம் போக்கும்
திருமஞ்சனப் பொடி = வியாதியைப் போக்கும்
பஞ்ச கவ்யம் = பாவங்களைப் போக்கும், மனப் பரிசுத்தமாகும்
பால்              = நீண்ட ஆயுளைத் தரும்
தயிர், மாம்பழம்   = புத்திர பலனைக் கொடுக்கும்
நெய்   = மோட்சத்தைக் கொடுக்கும்
சர்க்கரை    =       சத்ருவை ஜெயிக்கும்
பஞ்சாமிருதம், திராட்சை    = (புஷ்டி)பலத்தைத் தரும்
கரும்புச் சாறு     = ஆரோக்கியம் தரும்
பழச்சாறு, நாரத்தை    = எம பயம் அகற்றும்
இளநீர்     = உயர்ந்த பதவி தரும்(போக பாக்கியம்)
அன்னாபிஷேகம்    = விருப்பம் நிறைவேறும்
அரிசி     = சாம்ராஜ்யத்தைத் தரும்
வாழைப்பழம்      = பயிர் விருத்தியாகும்
மாதுளம்பழம்      = கோபத்தைப் போக்கும்
பலாப்பழம்        = மங்களத்தைத் தரும்
சாத்துக்குடி        = துக்கத்தைப் போக்கும்
எலுமிச்சம்பழம் = உலகம் வசமாகும் நிலை
தரும், பகைமையை அழிக்கும்
விபூதி  =சகல சௌபாக்கியமும் தரும், மோட்சம் தரும்
சந்தனம்  =கீர்த்தியைக் கொடுக்கும், சுகம் பெறுதல்,இறைவனோடு இரண்டறக் கலக்க செய்யும்
பன்னீர் = சருமத்தைக் காக்கும், திருமகள் அருள் கிடைக்கும்
கும்பம்(ஸ்தபனம்), பழ பஞ்சாமிர்தம் = அஷ்டலட்சுமி சம்பத்தைத் தரும்,சாந்தி தரும்
சங்காபிஷேகம்  =சர்வ புண்ணியத்தையும் தரும்
வஸ்திரம், சொர்ணாம்பிஷேகம்   = லாபம் தரும்
 

Monday, 19 January 2015

திருக் கார்த்திகை பண்டிகை - தீபம் ஏற்றுவோம் - வளமும் நலமும் பெறுவோம்

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று, திருக் கார்த்திகை - தீபத் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

கார்த்திகை மாதம் என்பது - நவம்பர் - டிசம்பர் மாதத்தில் வரும். காலண்டரைப் பார்த்து, கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்தே, தினமும் மாலையில் விளக்கேற்றியதும், ஒன்று அல்லது இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி, வாசல் நிலைப்படியில் ஒரு பக்கமாக அல்லது இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும். 

சிலர் மாதப் பிறப்புக்கு முதல் நாளிலிருந்தே வாசலில் ஒரு விளக்கு தினமும் ஏற்றி வைப்பார்கள்.

கார்த்திகைப் பண்டிகைக்கு முதல் நாள் பரணி தீபம் என்று கொண்டாட வேண்டும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பரணி தீபம் அன்று, தினமும் வாசலில் வைக்கும் தீபங்களுடன் கூடுதலாக சில தீபங்கள் ஏற்றி, வாசலில் கோலம் போட்டு, அதன் மேல் அழகாக வைக்கலாம்.

பரணி தீபத்தை மோட்ச தீபம் என்றும் சொல்வார்கள். சில வீடுகளில், வீட்டில் இருக்கும் வயதானவர்கள், தினம் ஒரு திரி என்ற கணக்கில், 365 திரிகள் திரித்து வைத்து, அதை ஒரு பெரிய அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி, 365 திரிகளைப் போட்டு ஏற்றி வைப்பார்கள்.

கார்த்திகை தீபத்தன்று, காலையில் சீக்கிரம் எழுந்து, வீட்டில் இருக்கும் பெரிய விளக்குகள், அகல் விளக்குகள் எல்லாவற்றையும் கழுவி, காய வைத்து, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

பெரிய விளக்கு - 4 அல்லது 5 முகம் கொண்ட விளக்குகளில் - எல்லாப் பக்கமும் திரிகள் போட வேண்டும்.

எல்லா விளக்குகளுக்குமே - இரண்டு திரிகள் போட வேண்டும்.

பூஜை அறையில் - சுவாமி படங்களைத் துடைத்து, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். 

பூஜை அறையின் கதவில் அல்லது வீட்டு வாசல் கதவில் - கரைத்த பச்சரிசி மாவில் கையை நனைத்து, அச்சுப் பதிப்பது உண்டு.

அதே போல, பூஜை அறையிலும் - அலமாரியின் முன்னால், பாதங்கள் வரைவது உண்டு.

மஹாபலி அரசர் கார்த்திகை அன்று, வீட்டுக்கு வருவதாக, பெரியவர்கள் சொல்வார்கள். அதன் அடையாளமாக இப்படி கோலமிடுவது வழக்கம்.




பூஜைக்கான பொருட்கள் - சந்தனம், குங்குமம், விபூதி, பூ, தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, சூடன், சாம்பிராணி, தசாங்கம், எல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

பூஜைக்கான நைவேத்தியங்கள்:

பொரி உருண்டை, அப்பம், மாவிளக்கு, பச்சரிசி மாவு விளக்கும் அடையும் மற்றும் கொழுக்கட்டையும்.

பொரி உருண்டை -
செய்முறை:

அல்லது கடைகளில் கிடைக்கும் பொரி உருண்டைகள் வாங்கிக் கொள்ளலாம்.

மாவிளக்கு:
செய்முறை:

மாவிளக்கில் வெல்லம் சேர்த்துப் பிசைந்து, சிறிது நேரத்தில் நன்றாக இளகி விடும். அதனால், தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம். விளக்கேற்றும் நேரத்தில், சரியான பதத்தில் செய்து கொள்ளவும். இளகி, நீர் விட்டால், இலையில் வைக்கும்போது, உருகி ஓடும் பதத்தில்  ஆகி விடும். கவனமாக செய்யவும்.

மாவிளக்கை செய்து, அதன் நடுவில் - விரலால் பள்ளம் செய்து, அதில் உருக்கிய நெய்யை ஊற்றவும். திரி போடவும். மாவிளக்குக்கு சந்தனம் குங்குமம் வைக்கவும். பூஜையின் போது மற்ற விளக்குக்களை ஏற்றும் போது, இந்த மாவிளக்கையும் ஏற்றவும்.

அப்பம் செய்முறை:


கோதுமை மாவு, வெல்லம் கரைத்து, பணியார சட்டியில் ஊற்றியும் எடுக்கலாம்.

பச்சரிசி மாவு கொழுக்கட்டை:

செய்முறை:

மேலே உள்ள குறிப்பில் சொல்லியிருப்பது போல, பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து, பிசைந்து கொள்ளவும். சின்ன சின்னதாக, விரல் நீளத்தில் கொழுக்கட்டைகள் செய்து கொள்ளவும்.

எலுமிச்சம்பழ அளவில் 30 உருண்டைகள் உருட்டிக் கொள்ளவும்.

12 உருண்டைகளை, தட்டு போல செய்து கொள்ளவும்.

இன்னும் 12 உருண்டைகள் எடுத்து,  அகல் விளக்கு போல(சிறிது குழியாக - 2 அல்லது 1 ஸ்பூன் நெய் கொள்ளும் அளவுக்கு) செய்து கொள்ளவும்.

கொழுக்கட்டைகள், தட்டு(அடை), விளக்குகள் இவற்றை - கொஞ்சம் கொஞ்சமாக, இட்லித் தட்டில் வைத்து, வேக வைத்து, எடுத்து வைக்கவும்.

12 விளக்குகள் செய்ய 24 உருண்டைகள் போதும். இருந்தாலும், வேக வைத்து எடுக்கும்போது, சில விளக்குகள் சரியாக வரவில்லையென்றால், கூடுதலாகத் தேவைப்படும். அதற்காகத்தான் 30 உருண்டைகள் செய்து கொள்ளவும்.

மேலே சொன்ன அளவுக்கு செய்ய அரை கிலோ பச்சரிசி மாவு தேவைப்படும்.

ஒரு தாம்பாளத்தில் வெந்த கொழுக்கட்டைகளை பரப்பி, அதன் மேல் கொழுக்கட்டை அடைகளையும் விளக்குகளையும் அழகாக வைக்கவும். சிறிது குங்குமம் வைக்கவும்.

எல்லா விளக்குகளிலும் உருக்கிய நெய் ஊற்றி, திரி போட்டு வைக்கவும்.

பூஜையின் போது, இந்த விளக்குகளையும் ஏற்றவும்.


கார்த்திகை அன்று, காலையில் இருந்தே, வேலைகள் சரியாக இருக்கும். 

பெண்கள், குழந்தைகள் - நல்ல பட்டாடைகள் உடுத்தி, நகைகள் போட்டு, தலையில் பூ வைத்துக் கொள்ளவும்.

பூஜை அறையில், மேலும் சில கோலங்கள் போட்டு, விளக்குகளை அழகாக, தயாராக வைக்கவும்.

ஒரு வாழை இலையில், ஒரு வெற்றிலையின் மேல் - மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, சந்தனம், குங்குமம், பூ, வைக்கவும்.

நைவேத்தியப் பொருட்கள், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் இவற்றையும் வைக்கவும்.

சிறிய தீபங்களை தாம்பாளங்களில் தயாராக வைக்கவும்.

எல்லா விளக்குகளையும் பொறுமையாக ஏற்றவும். மாலை ஐந்து அல்லது ஐந்தரைக்கு ஏற்ற ஆரம்பித்தால், சரியாக இருக்கும்.

மாவிளக்குகளையும் ஏற்றவும்.

தேங்காய் உடைத்து, தூபம், தீபம், காட்டி, நைவேத்தியம் செய்யவும்.

வீட்டில் உள்ள எல்லா விளக்குகளையும் போட்டு வைக்கவும்.

எல்லா ஹால்களிலும் அங்கங்கே கோலங்கள் போட்டு, அவற்றில் விளக்குகள் வைக்கவும்.

வாசலிலும் போட்டு வைத்திருக்கும் கோலங்களின் மேல், விளக்குகளை வைக்கவும்.

மத்தாப்புகள் இருந்தால், குழந்தைகள் அவற்றை ஏற்றி, மகிழலாம்.

தீபங்கள் ஏற்றும் போது, தரையில் எண்ணெய் சிந்தியிருந்தால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அதே போல, குழந்தைகளும் தீபங்களில் சுட்டுக் கொள்ளாமல், கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு பிரசாதம் கொடுக்கவும்.

மறு நாள் - மிச்ச கார்த்திகை என்று சொல்வார்கள்.  சில விளக்குகளை மட்டும் வாசலில் ஏற்றி வைக்கலாம்.

மேலே சொன்ன எல்லா நைவேத்தியங்களும் செய்ய முடியா விட்டால், சிலவற்றை மட்டும் செய்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் தேங்காய் உடைப்பது இயலவில்லையென்றால், வெற்றிலை, பாக்கு, பழம் இவற்றைப் படைத்து, வணங்கலாம்.

நம்மால் முடிந்ததை செய்வது சிறப்பு.

தீபம் ஏற்றுவோம்! தீப ஒளியை வணங்குவோம்!! சிறப்பும் செல்வமும் பெறுவோம்!!!








Saturday, 3 January 2015

தீபாவளியைக் கொண்டாடுவோம்

நவராத்திரி, கொலு, சரஸ்வதி பூஜை நல்லபடியாக கொண்டாடியாச்சு.

இனி, அடுத்தது, தீபாவளிதானே!

ஐப்பசி மாதம் (அக்டோபர்-நவம்பரில்)தீபாவளி பண்டிகை வ்ருகிறது.

புத்தாடை உடுத்தி, இனிப்பு, காரம் என்று பட்சணங்கள் செய்து, மத்தாப்பு கொளுத்தி, மகிழ்வோடு கொண்டாடும் பண்டிகை இது.

தீபாவளியன்று காலையில் தலையில் நல்லெண்ணெய் வைத்து, சீயக்காய்ப் பொடி தேய்த்து, வென்னீரில் குளிக்க வேண்டுமாம்.

இன்று உள்ள கால கட்டத்தில், சாஸ்திரத்துக்காக, தலையில் துளி எண்ணெய் வைத்து, ஷாம்பூ போட்டு, குளித்து விடுகிறோம்.

தீபாவளிக்கு இரண்டு அல்லது மூன்று நாள் முன்னதாக, ஒரு காரம், ஒரு இனிப்பு செய்து வைத்துக் கொள்ளலாம்.

சில பலகாரங்கள் செய்முறைக்கு கீழே லிங்க் கொடுத்திருக்கிறேன்.

இனிப்பு:

http://www.arusuvai.com/tamil/node/12120 - நெய் விளங்காய்

http://www.arusuvai.com/tamil/node/12158 - முந்திரிப்பருப்பு கேக்

http://www.arusuvai.com/tamil/node/9333 - பாதாம் அல்வா

http://www.arusuvai.com/tamil/node/9191 - மைசூர் பாக்

http://www.arusuvai.com/tamil/node/16325 - கோகனட் ட்ரஃபுல்ஸ்

http://www.arusuvai.com/tamil/node/24533 - முந்திரி பர்ஃபி(காஜு கத்லி) கடையில் வாங்குவது போலவே சூப்பராக செய்ய வரும்.

http://www.arusuvai.com/tamil/node/28287 - பால் கோவா

கார பட்சணம் லிங்க் தருகிறேன்:

http://www.arusuvai.com/tamil/node/15028 - சுலப முறுக்கு(ரொம்ப சுலபமாக செய்யலாம்)

http://www.arusuvai.com/tamil/node/29120 - தட்டை

http://www.arusuvai.com/tamil/node/13560 - மகிழம்பூ தேங்குழல்

http://www.arusuvai.com/tamil/node/16920 - ரிப்பன் பக்கோடா

http://www.arusuvai.com/tamil/node/29189 - சீடை(ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்)

http://www.arusuvai.com/tamil/node/13595 - மசாலா கடலை

மேலே சொன்ன பலகாரங்கள், இனிப்புகளை, இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே செய்து வைத்துக் கொள்ளலாம்.

தீபாவளியன்று காலையில் கேசரி, பஜ்ஜி, உளுந்த வடை, சுசியம், கார வடை போன்ற பலகாரங்களில் எது முடிகிறதோ அவற்றை செய்து கொள்ளலாம்.

லிங்க் கீழே தருகிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/29165 - ரவா கேசரி

http://www.arusuvai.com/tamil/node/17225 - கார வடை சட்னியுடன்

http://www.arusuvai.com/tamil/node/20006 - ரஸ்க் அல்வா

http://www.arusuvai.com/tamil/node/12108 - சுவியம், சுகியன், சுசியம்

இதோடு - இப்போது கிடைக்கும் ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் வாங்கி வைத்துக் கொண்டு, அதில் முக்கோண வடிவத்தில் கட் செய்த ப்ரெட் துண்டுகளைத் தோய்த்து, ப்ரெட் பஜ்ஜி செய்யலாம். அல்லது இதே மாவில் வெந்த காய்கறி கலவை அல்லது வேக வைத்த காலிஃப்ளவர் அல்லது ப்ராக்கோலி துண்டுகளை முக்கி எடுத்து, பஜ்ஜி செய்யலாம்.

செய்த பலகாரங்களில் 3/5/7/9/12 என்ற எண்ணிக்கையில் பாத்திரங்களில் எடுத்து, விளக்கு முன்னால் பூஜையறையில் வைக்கவும்.

வீட்டில் அனைவருக்கும் எடுத்திருக்கும் புதுத் துணிகளில் மஞ்சள்/குங்குமம் தடவி, விளக்கு முன்னால் ஒரு பேப்பரை விரித்து, அதன் மேல் அடுக்கி வைக்கவும்.

வீட்டுத் தலைவிக்கு எடுத்திருக்கும் புதுப் புடவை/புத்தாடையை எல்லா உடைகளுக்கும் மேலாக வைக்கவும்.

பூஜையறையை சுத்தப்படுத்தி, படங்களுக்கும் விளக்குக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, முதலிலேயே தயார் படுத்திக் கொள்ளவும்.

ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.

பிள்ளையார், குலதெய்வம், இஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட தெய்வங்களை நினைத்து வணங்கி, சூடன் ஏற்றி,  தீபாராதனை காட்டி, நைவேத்தியம் செய்யவும்.

அவரவருக்கு உண்டான புது உடைகளை வீட்டுத் தலைவரிடம் ஆசி பெற்று, வாங்கி, உடுத்திக் கொள்ளவும்.

புதுத் துணி உடுத்திக் கொண்ட பின், வீட்டுப் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி, ஆசி பெற்று, பணம் /பரிசு பெற்றுக் கொள்ளவும்.

அக்கம்பக்கம்/உறவினர்/நண்பர்கள் வீடுகளுக்கு பலகாரம் கொடுக்கவும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பட்சணம்/பலகாரம் சாப்பிட்டதும், கோவிலுக்கு அனைவரும் சென்று வரலாம்.