Friday, 27 March 2015

பொங்கலோ பொங்கல்!

பொங்கல் பண்டிகை - தமிழர்களின் திருவிழா.

தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாளை, பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்.

ஜனவரி 14 அல்லது 15ல் இந்த நாள் வரும்.

சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக அமைகிறது இந்தப் பண்டிகை.

நம் வீடுகளைப் பொறுத்த வரையில், வருடம் ஒரு முறை, வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து, பொங்கலுக்கு முதல் நாள் கோலங்கள் இட்டு, வீட்டை அழகுபடுத்தி, பொங்கலன்று அதிகாலையில் மூன்று பானைகள் பொங்கலிட்டுப் படைப்பதை வழக்கமாக செய்வதுண்டு.

மார்கழி மாதம் முப்பது நாட்களும் வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள்/பெரிய கோலங்கள் போட்டு, அழகு படுத்துவது வழக்கம்.

சிலர் வீட்டு வாசலில், நிலைப்படியின் அருகில், அதிகாலையில் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைப்பார்கள்.

அந்தக் காலங்களில், வீட்டுக்கு வெள்ளையடிப்பது மார்கழி மாதத்தில்தான்.

வெள்ளை அடிக்கும்போது, வீட்டுச் சேந்தி(பரண்) மற்றும் ஸ்டோர் ரூம், அடுக்களை எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.

பெட்டியிலும் பீரோவிலும் இருக்கும் துணிமணிகளை எல்லாவற்றையும் எடுத்து, கீழே வைத்து விட்டு, புதிய நியூஸ் பேப்பர் விரித்து, மீண்டும் ஒரு முறை அடுக்கி வைப்பார்கள்.

அதே போலத்தான் அலமாரிகளும்.

 தேவையில்லாத பொருட்களைக் கழிக்கலாம். சில சமயம் ஏதாவது புதையல் கூட அகப்படும்:):) ஆமாம், பல நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த விஷயங்கள் கிடைக்கும்.

அடுப்படியிலும் எல்லா டப்பாக்களையும் காலி செய்து, கழுவி, வெயிலில் காய வைத்து எடுப்பார்கள்.

இப்போதெல்லாம் யாரும் வருஷத்துக்கு பொருட்கள் வாங்குவதில்லை. மாதா மாதம் மளிகைப் பொருட்கள் வாங்கும்போதே, டப்பாக்களை சுத்தம் செய்துதான் போட்டு வைக்கிறோம் இல்லையா.

பாய்கள், தலையணைகள், மெத்தைகளையும் வெயிலில் காயப் போட்டு, எடுத்து வைக்கலாம்.

தலையணை, மெத்தைகளில் இருக்கும் வியர்வைக் கறைகள் மறைந்து விடும். அதோடு வெயிலில் காய வைப்பதால், பஞ்சுத் தலையணைகளில் இருக்கும் பஞ்சு நன்றாகக் காய்ந்து, உப்பி, மென்மையாகும்.

நமக்குத் தேவைப்படாத பொருட்களை, மற்றவர்களுக்கு பயன்படக் கூடியவற்றை, கொடுத்து விடலாம்.

இனி பொங்கலன்று, பொங்கல் வைக்கும் முறையைப் பார்ப்போம்.

பாரம்பரிய முறையில் -

வீட்டு வாசலில் கூரைப் பூ சொருகி வைப்பார்கள்.

வீட்டு வாசலில்,  மூன்று அடுப்புகள் வைக்கும் விதமாக, நேர்க் கோட்டில், வரிசையாகக் கோலமிடவும்.

அதன் மீது மணல் பரப்பவும்.

ஃ (ஆயுத எழுத்து) வடிவத்தில் இரண்டிரண்டு செங்கல்கள் அடுக்கி, அடுப்புகள் அமைக்கலாம்.


வரிசையாக மூன்று அடுப்புகள் அமைக்க வேண்டும். 

இரும்பு அல்லது மண் அடுப்புகள் இருந்தாலும் வைக்கலாம்.

அடுப்புகளை கழுவி, அதன் மேலும் சுண்ணாம்பு கோலமிட்டு வைக்கவும்.

பொங்கல் பானைகளை தேய்த்துக் கழுவி, சந்தனம் குங்குமம் இடவும். சுண்ணாம்பு அல்லது கரைத்த பச்சரிசி மாவினால், விபூதிப்  பட்டை போல பட்டைகள் போட்டு, பானைகளை அலங்கரிக்கலாம்.

மஞ்சள் குலைகளை, பானைகளின் கழுத்துப் பகுதியில் சுற்றிக் கட்ட வேண்டும்.

ஒரு பானையில் சர்க்கரைப் பொங்கல்

இன்னொரு பானையில் பச்சரிசி 1 பங்கும் பாசிப்பருப்பு கால் பங்கும் கலந்த பொங்கல்

மற்றொரு பானையில் மஹா நைவேத்தியம் என்று சொல்லப்படும், பச்சரிசி மட்டும் வேக வைத்த வெள்ளைப் பொங்கல்

என்று வைக்க வேண்டும்.

இப்போது விறகு அடுப்பு வைக்க தோதுப் படாததால், அனேகமாக காஸ் அடுப்பிலேயே, குக்கரில் பொங்கல் வைப்பது வழக்கமாகி வருகிறது.

காஸ் அடுப்பில், குக்கரில் வைத்தாலும், மூன்று பொங்கல் செய்து, படைத்து, வணங்கவும்.

பொங்கல் செய்யும் சமையல் குறிப்புகளை, பிறகு பார்க்கலாம்.

பொங்கல் வைக்க ஆரம்பிக்கும் முன்னால், பூஜைக்கு தயாராக எடுத்து வைக்க வேண்டியவை:

விளக்கு - சிறிய காமாட்சி விளக்கு வைக்கலாம். விளக்கை தூய்மையாக்கி, சந்தனம் குங்குமம் இட்டு, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, திரி போட்டு, பூ சாற்றி, எடுத்து வைக்கவும்.

நிறை நாழி - வீட்டில் அளக்கும் உழக்கு இருந்தால் - சுத்தம் செய்து - சந்தனம், குங்குமம் வைத்து, அதில் கோபுரம் போல - நெல் அல்லது பச்சரிசியை அளந்து, எடுத்து வைக்க வேண்டும். அதன் மீது ஒரு பூ வைக்கலாம்.

உழக்கு இல்லையென்றால் - ஒரு புதிய தம்ளரில் அரிசி/நெல் அளந்து வைக்கலாம்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, ஒரு வெற்றிலையின் மீது வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாருக்கு, சந்தனம், குங்குமம், பூ வைக்க வேண்டும்.

நெல்லை போன்ற ஊர்களில் செம்மண்ணால் பிள்ளையார் பிடிப்பதுண்டு.

பசு வளர்க்கும் வீடுகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள்.

அவரவர்  வீட்டு வழக்கப்படி செய்யலாம். மஞ்சள் பொடி எப்போதும் கிடைக்கும், அதனால் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, பூஜைக்கு வைக்கலாம்.

நுனி வாழை இலை இரண்டு, வாழைப் பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ, சூடன், சாம்பிராணி, ஊதுவத்தி முதலிய பொருட்கள்.

பொங்கல் இட்டு(வைத்து) முடித்ததும், விளக்கை ஏற்றவும்.

வாழை இலைகளை, விளக்கின் முன்னால் விரித்து வைக்கவும்.

இலைகளின் நுனி - விளக்கின் இடது பக்கம் - அதாவது விளக்குக்கு பரிமாறுவது போல - போட்டு,  இலையில் தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்ய வேண்டும்.

இலையின் மீது - சிறிய விளக்கு, நிறை நாழி, மஞ்சள் பிள்ளையார் மூன்றையும் வரிசையாக வைக்க வேண்டும்.

மூன்று பொங்கல்களிலும் ஒவ்வொரு கரண்டி எடுத்து, இலையில் வைக்க வேண்டும்.

பொங்கலிட்ட பானைகள்(பாத்திரங்கள்) அப்படியே கொண்டு வந்து வைத்துக் கொள்ளலாம்.

ஒரு தாம்பாளத்தில் புதிய காய்கறிகள் வைக்க வேண்டும். சர்க்கரைப் பூசணிக்காய், சிறுகிழங்கு, மொச்சைக் காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு இவையெல்லாம் பொங்கலன்று சிறப்பாக வாங்குவார்கள்.

கரும்பு, பனங்கிழங்கு இவையும் பொங்கல் சிறப்பு.

வெற்றிலை, பாக்கு, பழங்கள் எல்லாம் படைத்து, ஊதுபத்தி ஏற்றி, தீபம் ஏற்றி, சாம்பிராணி தூபமிட்டு, சூடன் தீபாராதனை காட்டி, நைவேத்தியம் செய்ய வேண்டும்.

யு.எஸ்.ஸில் தேங்காய் உடைக்கும் பழக்கம் இல்லையென்றால் பரவாயில்லை, தூபம், தீபம், வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, நைவேத்தியம் செய்யலாம்.

தீபாராதனையை, சூரியன் இருக்கும் கிழக்கு திசையை நோக்கியும் செய்ய வேண்டும்.

பிறகு, மூன்று பொங்கல்களிலும் சிறிதளவு எடுத்து, காக்காய்க்கு வைக்கலாம்.

யு.எஸ்.ஸில் காக்காய்க்கு வைக்கும் பழக்கம் இல்லையென்றால், சிறிதளவு பொங்கல் எடுத்து, செடிகளின் அடியில் போடலாம். எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் சாப்பிடும்.

தெரிந்த நண்பர்கள் வீட்டுக்கு, பொங்கல் கொடுத்து, வாழ்த்துக்கள் சொல்லலாம்.

பெரியவர்கள், குழந்தைகள் புத்தாடை உடுத்தி, மகிழலாம்.

முக்கிய்மான விஷயம் - பொங்கலிட்டுப் படைப்பதை,  சூரியோதயத்துக்கு முன்னால் - அதிகாலை 6 மணிக்கு முன்னால் செய்து விடுவது விசேஷம்.

தேவையானவற்றை முதல் நாளே தயார் செய்து கொண்டு விடலாம்.

பாத்திரங்கள், பூஜை அறை, இவற்றை முதல் நாளே சுத்தம் செய்து வைத்து விடலாம்.

கோலமிடுவது, சுவாமி படங்களுக்குப் பொட்டிட்டு வைப்பது, இந்த வேலைகளும் முதல் நாள் இரவே செய்து வைத்து விடலாம்.

அரிசி, பருப்பு முதலியவற்றை, அளந்து எடுத்து வைக்கலாம்.

வெல்லத்தைத் தட்டி வைத்துக் கொள்ளலாம்.

இவற்றையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்டால், காலை நான்கு மணிக்கு எழுந்தால், ஆறு மணிக்குள் - பொங்கலிட்டு இறக்கி, சுவாமி கும்பிட்டு விடலாம்.

மதியத்துக்கு சர்க்கரைப் பூசணிக்காயும் சர்க்கரை வள்ளிக் கிழங்கும் போட்ட சாம்பார், மொச்சைப்பயறும் சிறுகிழங்கும் சேர்த்த அவியல் செய்யலாம்.

இந்தக் காய்கள் கிடைக்கவில்லையென்றால் - கிடைக்கும் காய்களை சேர்த்து, சாம்பார் அவியல் மதிய உணவுக்கு செய்யலாம்.


No comments: