Thursday, 30 April 2015

அஜித்குமாரின் அன்பு மனம்


அஜித்குமாருடன் என் கணவர் திரு சுப்ரமணியம் ஒரு படத்தில் நடித்த போது, அஜித்குமார் எடுத்த ஃபோட்டோவைப் பற்றி, என் கணவர் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு இங்கே:





அஜித்குமாரின் அன்பு மனம்

சென்ற வருடத்தில் ஒரு நாள் – அஜித்குமாருடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது.

படப்பிடிப்பு இடைவேளையின் போது – சக நடிகர்கள் சிலர் ஒரு இடத்தில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தோம்.

லேசாக மழை ஆரம்பித்ததால் – அஜித்குமார் உள்ளே வந்தார். நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை அவர் கடந்த போது, மரியாதை நிமித்தம் நான் எழுந்து நின்றேன். அவர் உட்கார நினைத்தால் இடம் வேண்டுமே.

அஜித்குமார் என்ன செய்தார் தெரியுமா – என் தோளைப் பிடித்து அழுத்தி என்னை உட்கார வைத்தார்.

அது மட்டுமல்ல – “அங்கிள், நான் வர்றதுக்காக எல்லாம் நீங்க எழுந்திருக்ககூடாது, உட்காருங்க அங்கிள்`’ `என்று அன்புடன் கூறினார்.

அவர் அத்தனை அன்பாக சில வார்த்தைகள் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு ஃபோன் வந்தது.

அஜித்குமார் உங்களை ஃபோட்டோ எடுத்திருக்கிறார். இந்த நம்பரை காண்டாக்ட் செய்து, உங்கள் ஃபோட்டோவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார் ஒரு நண்பர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அஜித் குமார் என்னை ஃபோட்டோ எடுத்தாரா, எப்பொழுது என்று திகைத்தேன்.

குறிப்பிட்ட நண்பரை தொடர்பு கொண்டேன்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்த என்னை, எங்கோ தொலைவில் இருந்து, மிக அருமையாக ஃபோகஸ் செய்து, புகைப்படம் எடுத்திருந்தார் அஜித்குமார்.

அது மட்டுமா!

அந்தப் புகைப்படத்தை பெரிய அளவில் ப்ரிண்ட் செய்து, அதில் அவரது ஆட்டோக்ராப் இட்டிருந்தார்.
அழகான முறையில் அதை ஃப்ரேமும் செய்து, அனுப்பியிருந்தார்.

என்னுடைய மகிழ்ச்சியையும் திகைப்பையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

புகைப்படைத்தை என்னிடம் கொடுத்த நண்பர் என்ன சொன்னார் தெரியுமா?

“சார், இந்த ஃபோட்டோ உங்ககிட்ட கொடுத்தாச்சுன்னு அஜித்குமாருக்கு தகவல் சொல்லணும். நீங்க இதை கையில் வைத்துக் கொள்ளுங்க, ஒரு ஃபோட்டோ எடுக்கிறேன்.

அதோடு, நீங்க அஜித்குமாரிடம் ஏதாவது சொல்லணும் என்றால் அதையும் ஒரு வீடியோவாக எடுத்துக்கறேன்” என்றார்.



மகிழ்ச்சியில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ரொம்ப நன்றி அஜித் சார், சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களிடம் பேசி, என் நன்றியை சொல்ல ஆசைப்படறேன்”  என்று ஆர்வத்துடன் சொன்னேன் அந்த வீடியோவில்.

அடுத்த வாரத்தில் மற்றொரு படப்பிடிப்பில் நண்பர் என்னை சந்தித்தார்.

”அஜித்குமாரிடம் பேசணும்னு சொன்னீங்களாமே, இப்பப் பேசறீங்களா?” என்று கேட்டு, அஜித்குமாரின் செயலாளரின் ஃபோனில் தொடர்பு கொண்டு, என்னிடம் கொடுத்தார்.

“என்ன சுப்ரமணியம் சார், ஃபோட்டோ கிடைச்சுதா” என்று அஜித்குமாரின் காந்தக் குரல் கேட்டது.

‘கிடைச்சுது சார், ரொம்ப ரொம்ப சந்தோஷம். எனக்கு ஒரு ஆசை, உங்களுடன் இன்னும் நிறைய படங்களில் சேர்ந்து நடிக்கணும்” என்று கோரிக்கை வைத்தேன்.

“அதுக்கென்ன, கண்டிப்பா நான் உங்க கூட நிறைய படங்களில் நடிக்கிறேன்” என்றார் அன்புடன்.

எத்தனை எளிமையும் அடக்கமும் பாருங்கள்!!!

உங்க கூட நான் நடிக்கணும் என்று நான் சொல்ல, அதுக்கென்ன நடிக்கலாம் என்று சொல்லாமல், ‘நான் உங்க கூட நடிக்கிறேன்’ என்று வார்த்தைகளிலும் அவரது எளிமையான பண்பை வெளிப்படுத்திய பண்பாடு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மக்களின் மனம் கவர்ந்த அஜித் குமாருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ஸ்ரீ சௌபாக்கியலக்ஷ்மி அஷ்டகம்


அக்டோபர் 2014 மாத ‘ஞான ஆலயம்’ இதழில், நான் அனுப்பிய ‘ஸ்ரீ சௌபாக்கியலக்ஷ்மி அஷ்டகம்’ பிரசுரமாகி இருக்கிறது.

ஃபோட்டோ பிறகு அப்லோட் செய்கிறேன்.

ஸ்லோகம் இங்கே:



ஸ்ரீ ஸௌபாக்ய லக்ஷ்மி அஷ்டகம்

த்யான ஸ்லோகம்

வந்தே ஸத்குரு வரலக்ஷ்மீம் – ஸம்பூர்ண ஸௌபாக்ய லக்ஷ்மீம்
க்ஷீர ஸாஹரோத்பவ லக்ஷ்மீம் – ஜய ஜய கோஷ லக்ஷ்மீம்
ஆனந்த அம்ருத லக்ஷ்மீம் – அம்ருத கடாக்ஷ லக்ஷ்மீம்
ஆபதோத்தார லக்ஷ்மீம் – சாந்தி ஸௌபாக்ய லக்ஷ்மீம்

நமஸ்கார ஸ்லோகங்கள்:

ஓம் ஸ்ரீ ஆதி ஸந்தான கஜ தன தான்ய விஜய வீர மஹா லக்ஷ்மியை நமோ நம:

11)  ஸர்வாலங்கார லக்ஷ்மீம் – ஸகல ஸௌபாக்ய லக்ஷ்மீம்
சாரதா ரூப லக்ஷ்மீம் – ஸத்யலோக வாஸ லக்ஷ்மீம்
ஜிஹ்வா நிவாஸ லக்ஷ்மீம் – ஸார ஷேத்ர ப்ரஸாத லக்ஷ்மீம்
மந்த்ர ஸ்வரூப லக்ஷ்மீம் – மான ஸோல்லாஸ லக்ஷ்மீம்
ஸ்ரீமான ஸோல்லால லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

22)  விநய விமல லக்ஷ்மீம் – வேதாந்த சார லக்ஷ்மீம்
கருணா கடாக்ஷ லக்ஷ்மீம் – காருண்ய பாக்ய லக்ஷ்மீம்
புத்ர சந்தான லக்ஷ்மீம் – புவன தன தான்ய லக்ஷ்மீம்
ஸர்வ ஸௌபாக்ய லக்ஷ்மீம் – சாந்தி சம்பன்ன லக்ஷ்மீம்
ஸ்ரீ சாந்தி சம்பன்ன லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

33)  வித்ய விசால லக்ஷ்மீம் – வேதாந்த மோக்ஷ லக்ஷ்மீம்
அக்ஷ்ர பாக்ய லக்ஷ்மீம் – ஆத்மாநூபூதி லக்ஷ்மீம்
தாபத்ரய நாச லக்ஷ்மீம் – தன்வந்த்ரி ரூப லக்ஷ்மீம்
லோஹஸ்வரூப லக்ஷ்மீம் – சுத்த சௌபாக்ய லக்ஷ்மீம்
ஸ்ரீ சுத்த ஸௌபாக்ய லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

44)  ஸ்தாவர ஜங்கம லக்ஷ்மீம் – கோ தான்யாதி விருத்தி லக்ஷ்மீம்
ஸோம ஸோதர பாக்ய லக்ஷ்மீம் – சிந்தாமணி ரத்ன லக்ஷ்மீம்
க்ஷீர ஸௌபாக்ய லக்ஷ்மீம் – ஸேவித மோஹ லக்ஷ்மீம்
ஜய ஜய வைராக்ய லக்ஷ்மீம் – சித்த ப்ரஹாச லக்ஷ்மீம்
ஸ்ரீ சித்த பிரஹாச லக்ஷ்மீம் – சரணம் ப்ரபத்யே

55)  கல்பக காமதேனு லக்ஷ்மீம் – கனக ஸௌபாக்ய லக்ஷ்மீம்
தேவேந்தரா ரோஹண லக்ஷ்மீம் – ஐராவத பூஜ்ய லக்ஷ்மீம்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி லக்ஷ்மீம் – ஸேவ்ய ஸம்பன்ன லக்ஷ்மீம்
வீர்ய விஜய லக்ஷ்மீம் – விஷ்ணு மாயேதி லக்ஷ்மீம்
ஸ்ரீ விஷ்ணு மாயேதி லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

66)  ஜ்வரபய ஸோஹ ஹந்த்ரீம் – ஸோஹ விநாஸ மந்த்ரீம்
துஷ்ட மிருக வைர்தந்த்ரீம் – துர்ஸ்வப்ன நாஸ யந்த்ரீம்
துர்காஸ்வரூப லக்ஷ்மீம் – துரித ஹர மோக்ஷ லக்ஷ்மீம்
ஸாயுஜ்ய ஸாம்ராஜ்ய லக்ஷ்மீம் – ஸத்ய ஸ்வரூப லக்ஷ்மீம்
ஸ்ரீ ஸத்ய ஸ்வரூப லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

77)  ஜய ஜய கோஷ லக்ஷ்மீம் – சோம ஸௌபாக்ய லக்ஷ்மீம்
ஸர்வ ஸக்தி ஸ்வரூப லக்ஷ்மீம் – ஸர்வ மூர்த்தி ப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்ய லக்ஷ்மீம் – பால குஹ யோஹ லக்ஷ்மீம்
ஸர்வ ஸமய லக்ஷ்மீம் – ஜய மங்கள ஸ்தோத்ர லக்ஷ்மீம்
ஸ்ரீ ஜய மங்கள ஸ்தோத்ர லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

88)  ஞான ஸ்வரூப லக்ஷ்மீம் – நாதாந்த ஞான லக்ஷ்மீம்
ஸ்வரமய கீத லக்ஷ்மீம் – ஞானப்ரமோத லக்ஷ்மீம்
ஹ்ருத கமல வாஸ லக்ஷ்மீம் – சதுர்வேத ஸார லக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்ய லக்ஷ்மீம் – ஸ்ரீ அஷ்ட ஸௌபாக்ய ஸ்லோக லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே



Saturday, 25 April 2015

வடகம் போடலாமா

வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு, வருடம் முழுவதற்கும் தேவையான வற்றல் வடகம் போட்டு , எடுத்து வைக்க வேண்டும்.

ஏற்கனவே அறுசுவையில் புகைப்படங்களோடு கூழ் வடகம் குறிப்புகள் கொடுத்திருக்கிறேன்.

லிங்க் இதோ!

சுலப வடகம்

மேலே கொடுத்திருக்கும் வடகம், பச்சரிசியையும் ஜவ்வரிசியையும் வேக வைத்து, செய்யும் முறை.

இந்த வடகம், வீசிப் பொரியாது, ஆனால் சாப்பிடும்போது, மொறுமொறுப்பாக இருக்கும். கருகி விடாமல், கவனமாகப் பொரிக்க வேண்டும்.

நம் வீட்டில் எப்போதும் செய்யும் பிழியும் வடகக் குறிப்புக்கான லிங்க் இங்கே:

கூழ் வடகம்(உழக்கில்பிழியும் முறை)

மேலே சொல்லியிருக்கும் குறிப்பில், குக்கரில் வேக வைக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆனால், இந்த முறை வடகம் போடும்போது நான் கற்றுக் கொண்டது - வடக மாவை - நான் ஸ்டிக் பாத்திரத்தில்(அகலமான மற்றும் உயரமான பாத்திரம்)கிளறினால், சூப்பராக வெந்து விடுகிறது.

துளிக் கூட அடி பிடிக்கவில்லை. வெகு சீக்கிரம் வெந்து விடுகிறது. மரச் சட்டுவத்தால் கிளறி வேக விடுவது சுலபமாக இருக்கிறது.

வடகம் பொரித்தால் அப்படி ஒரு மொறு மொறுப்பு!

இதே கூழ் வடக மாவில், சின்ன வெங்காயத்தை அரிந்து, கலந்து, கிள்ளி வைக்கலாம். முக்கால் படி அரிசி அரைத்த வடக மாவுக்கு, குறைந்தது கால் படியாவது உரித்த வெங்காயம் வேண்டும்.

சின்ன வெங்காயத்தை உரிக்கும்போது, ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் உரிக்காத வெங்காயங்களைப் போட்டு, எடுத்து உரித்தால், கண் கரிக்காது.

உரித்த வெங்காயங்களை - கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி எடுத்தால், ஒன்று போல வரும். பொடியாக நறுக்க சிரமப்பட வேண்டாம்.

வெங்காய கறி வடகக் குறிப்பு இதோ

:வெங்காய கறி வடகம்(குழம்புக்கு தாளிக்க/தொட்டுக் கொள்ள)

வெயில் காலம் என்பது சித்திரை பிறந்த பிறகு என்று காத்திருக்க வேண்டாம்.

மாசி மாதம் - மகா சிவராத்திரி முடிந்து விட்டாலே, வடகம் போடும் வேலைகளைத் தொடங்கி விடலாம்.

அக்னி நட்சத்திர காலங்களில் மிக அதிகமாக வெயில் அடிக்கும் நேரத்தில் வடகம் போட்டால், வடகம் சிவந்து விடும் என்று சொல்வார்கள்.

அதே போல - மே மாதத்துக்குப் பிறகு - வெயில் அடித்தாலுமே, காற்றும் ஆரம்பித்து விடும். பிழிந்த வடகம் வெயிலில் காயும்போது, தூசி விழ வாய்ப்புகள் உண்டு.

இலை வடகம் என்று சொல்லப்படும் மெலிதான - அள்ளி ஊற்றும் முறையிலான வடகக் குறிப்பு இங்கே:

இலை வடகம்(அள்ளி ஊற்றும் முறை)

இந்த வடகத்தில் ஜவ்வரிசி சேர்க்காமலும் செய்யலாம்.


Monday, 13 April 2015

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள்

புத்தாண்டு பிறக்கிறது!

நம்பிக்கை, மகிழ்ச்சி, ஆனந்தம், அற்புதம் இவற்றோடு இனிய தமிழ்ப் புத்தாண்டை அன்புடன் வரவேற்போம்!



தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.

தமிழ்ப் புத்தாண்டை வீட்டில் எப்படிக் கொண்டாடுகிறோம்?

வீட்டை சுத்தம் செய்து, வீட்டு வாசலில் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்ய்லாம்.

கதவுகளிலும், நிலைகளிலும், கரைத்த மஞ்சளினால், பட்டையிட்டு, அதில் சிவந்த குங்குமம் வைத்து, அலங்கரிக்கலாம்.

வீட்டில் அனைவரும் புத்தாடை உடுத்தலாம்.

காலையில் பூஜை அறையில், சுவாமி படங்களுக்கு பொட்டு வைத்து, பூக்கள் வைத்து, அலங்கரித்து, விளக்கேற்றி, வணங்கலாம்.

காலையில் சர்க்கரைப் பொங்கல்/பாசிப்பருப்பு பாயசம்/வெல்ல அவல் இப்படி ஏதாவது ஒரு இனிப்பு செய்து, முதலில் பரிமாற வேண்டும்.

முடிந்தால் இனிப்பை பூஜையறையில் கடவுளுக்குப் படைத்து, நைவேத்தியம் செய்து, பிறகு எல்லோருக்கும் கொடுக்கலாம்.

மதிய உணவில் அறுசுவையும் சேர்ப்பது வழக்கம்.

சாதம், சாம்பார், அவியல், கூட்டு, மாங்காய் பச்சடி, வேப்பம்பூ பச்சடி, அப்பளம் செய்வதுண்டு.

மாங்காயின் புளிப்பும், வேப்பம்பூவின் கசப்பும் சமையலில் இடம் பெறும்.

வாழ்க்கை என்பது எல்லாம் சேர்ந்ததுதான் என்பதை உணர்த்துவதற்காக, இப்படி செய்வார்கள்.

உறவினர்கள்  மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் பரிமாறி, மகிழலாம்.

அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாம்.

சித்திரை மாதத்தில் வேறு என்ன விசேஷம்?

மதுரை மக்களுக்கு சித்திரை என்றாலே கொண்டாட்டம்தான்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலமாக நடைபெறும். மதுரையில் பெண்கள், அம்மன் திருமணம் பார்த்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வார்கள்.



தேரோட்டம் வெகு சிறப்பாக நடை பெறும்.

அழகர் மலையிலிருந்து மீனாட்சி திருமணத்துக்காக வரும் அழகரை, எதிர் கொண்டு வரவேற்பது, எதிர் சேவை .

அழகர் கோவிலில் இருந்து மதுரை வரை, திருக்கண் மண்டபங்கள் இருக்கும்.

எல்லா இடங்களிலும் விளக்கேற்றி, தேங்காய், பழம் படைத்து, மாலை அணிவித்து, அழகரை வணங்குவார்கள்.

சித்திரா பௌர்ணமி அன்று அழகர் ஆற்றில் இறங்கும் விழா புகழ் பெற்றதாகும்.



திருக் கல்யாணத்துக்கு முதல் நாள்,மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேக விழா நடக்கும். 

பட்டம் ஏற்று, மதுரை அரசியாக மீனாட்சி அம்மன் கொலு வீற்றிருக்கும்போது, நாம் கேட்கும் வேண்டுகோள்களை, கருணையுடன் அம்மன் ஏற்று, நடத்தித் தருவார் என்பது மதுரை மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.



சித்திரா பௌர்ணமியன்று, சித்திரகுப்தருக்காக விரதம் இருப்பதுண்டு.

புளிப்பு சேர்க்காமல், பாசிப்பருப்பு பாயசம் செய்து, சித்திரகுப்தருக்குப் படைத்து, அதை மட்டும் அருந்துவார்கள்.

 நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்திரகுப்தர். அதனால் அவரை சித்திரா பௌர்ணமியன்று நினைத்து வணங்கி, ஏடும எழுத்தாணியும் பூஜையறையில் வைத்து, வணங்குவார்கள்.

புது வருடம் எல்லோருக்கும் அன்பையும் ஆனந்தத்தையும் நம்பிக்கையையும் தந்து, நல்லன எல்லாம் என்றென்றும் நிலைத்திருக்க, ஆண்டவனை வேண்டுவோம்!