Thursday, 14 May 2015

ரசித்தவை ருசித்தவை 2 - ஹோட்டல் சாம்பார்

ஹோட்டல் சாம்பார்/சரவணபவன் சாம்பார்

சாதத்தில் ஊற்றி சாப்பிடுகிற சாம்பாருக்கும், காலை டிஃபனுக்கு - பொங்கல்/இட்லிக்கு செய்கிற சாம்பாருக்கும் செய்முறையில் வித்தியாசம் இருக்கிறது.

இட்லிக்கு - காரம் குறைவாக, கொஞ்சம் இனித்தாற்போல, தக்காளி கூடுதலாக சேர்த்தால் நன்றாக இருக்கும்.

இருந்தாலும், ஹோட்டல் சாம்பார் குறிப்பு தெரிந்தால் அதன்படி செய்து பார்க்கலாமே என்று தேடினேன்.

சரவணபவன் சாம்பார்/ஹோட்டல் சாம்பார் என்ற தலைப்பில் நிறைய தோழிகள் அருமையான குறிப்புகள் கொடுத்திருந்தார்கள்.

அவங்க சொல்லியிருந்ததில் கவனித்தது - தக்காளியும் பொரிகடலையும் அரைத்துக் கொள்ளணும், அத்துடன் சாம்பார் பொடியையும் அரைத்து, வெங்காயம் தக்காளியுடன் அரைத்ததை வதக்கி, கொதிக்க வைக்க வேண்டும் என்பது.

அனேகமாக எல்லாக் குறிப்புகளிலுமே புளி சேர்க்காமல்தான் செய்ய சொல்லியிருந்தார்கள். ஆனால், எனக்கு புளி சேர்த்து சாம்பார் செய்யவே விருப்பம்.

சாம்பாருக்கு அனேகமாக தனி மிளகாய்ப்பொடிதான் சேர்ப்பேன். சாம்பார் பொடி என்று தனியாக திரித்து வைத்துக் கொள்வதில்லை. மல்லிப் பொடியை கொஞ்சம் சேர்த்துப் போட்டு விடுவேன்.

அதனால் சிறு வித்தியாசங்களுடன் செய்து பார்த்தேன். ரொம்பவும் நன்றாகவே வந்தது.

இதோ செய்முறை:

ஹோட்டல் சாம்பார்/சரவணபவன் சாம்பார்: இட்லிக்கு/வெண்பொங்கலுக்கு:

தேவையான பொருட்கள்:

புளி                       2 எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு     முக்கால் கப்
பாசிபருப்பு         2 ஸ்பூன்
மிளகாய்ப்பொடி   இரண்டரை டீஸ்பூன்
மல்லிப் பொடி   1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி   அரை டீஸ்பூன்
உப்பு   சுவைக்கேற்ப

கருவேப்பிலை, பச்சைக் கொத்துமல்லி சிறிதளவு

நறுக்கி வைக்க வேண்டியவை:
பெரிய வெங்காயம்      1
பச்சை மிளகாய்         3
தக்காளி             2
கத்தரிக்காய்    2
முருங்கைக்காய் 1
காரட்      2
அரைக்க:
தேங்காய்ப்பூ   கால் கப்
பொரிகடலை    1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு   1 டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி  1

தாளிக்க:

எண்ணெய்      1 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு    1 டீஸ்பூன்
வெந்தயம்   கால் டீஸ்பூன்
பெருங்காயப் பொடி  அரை டீஸ்பூன்
கிள்ளிய சிவப்பு மிளகாய்  2

செய்முறை:

புளியை நன்றாக ஊற வைத்து, கரைத்து வைக்கவும்.
குக்கரில் துவரம்பருப்பையும் பாசிப்பருப்பையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பொடி சேர்த்து, குழைவாக வேக வைத்து, மசித்து, கரைத்து வைக்கவும்.
வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை பெரிய் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
சாம்பாரில் போடுவதற்கு, கத்தரிக்காய்/ முருங்கைக்காய் இவை இருந்தால், குழையாமல் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
காரட்/முள்ளங்கி போன்ற காய்களாக இருந்தால், வில்லைகளாக நறுக்கி, பருப்புடன் சேர்த்து, குக்கரில் வேக வைத்து விடலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய் வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு, வதக்கவும்.
பிறகு, நறுக்கிய தக்காளியும் சேர்த்து, குழைய வதக்கவும்.
இதில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்க்கவும்.
உப்பும் சேர்க்கவும்.
புளி பச்சை வாசனை போக, கொதித்ததும், வெந்த பருப்பையும் சேர்த்து, ஒரு கொதி வ்ர விடவும்.

இதற்கிடையில், மிக்ஸியில் தேங்காய்ப்பூ, பொரிகடலை, கடலை மாவு, மிளகாய்ப்பொடி, மல்லிப் பொடி, இவற்றை சேர்த்து, நன்றாக மசிய அரைத்து வைக்கவும்.
தக்காளியையும் தனியாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
கொதித்த புளித்தண்ணீர் மற்றும் பருப்புக் கலவையில், அரைத்த தக்காளி மற்றும் தேங்காய்ப்பூ கலவையை கரைத்து ஊற்றவும்.

கடலை மாவு/பொரிகடலை சேர்த்து அரைத்திருப்பதால், கிளறிக் கொண்டே ஊற்றவும். இல்லையென்றால், கட்டிகளாகி விடும்.

அடி பிடிக்காத பாத்திரத்தில், இந்த சாம்பாரை கொதிக்க விடவும். அடிக்கடி கிளறி விட வேண்டும்.
நுரை அடங்கக் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

தனியாக காய்கள் வேக வைத்திருந்தால், அவற்றையும் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம், பெருங்காயப் பவுடர், கிள்ளிய சிவப்பு மிளகாய் இவற்றைப் போட்டு, தாளிக்கவும். 
கருவேப்பிலை சேர்க்கவும்.
இதை சாம்பாரில் கலக்கவும்.
கழுவி, சுத்தம் செய்த, பொடியாக நறுக்கிய மல்லித் தழையை, மேலே தூவி, கலக்கவும்.
சுவையான ஹோட்டல் சாம்பார் தயார்.
இட்லி, தோசை, வெண் பொங்கலுக்கு பொருத்தமாக இருக்கும்.


தளபதி விஜய் அவர்களுடன் – தங்கமான தருணங்கள்!



என் கணவர் திரு சுப்ரமணியம் அவர்கள், ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருக்கும் ஒரு பதிவு இங்கே:
தளபதி விஜய் அவர்களுடன் – தங்கமான தருணங்கள்!

மதுரையில் வேலை பார்த்து, ரிடையர் ஆன பிறகு, சென்னைக்கு வந்து - திரைப்படங்களிலும், சீரியல்களிலும், விளம்பரப்படங்களிலும் நடித்தது, மிகவும் அருமையான வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது.
‘கத்தி’ பட்த்தில் நடிகர் விஜய்யுடன், முருகதாஸ் டைரக்‌ஷனில் நடித்தது மறக்கவே முடியாத ஒன்று.
ஆகஸ்ட் 18, 2013 அன்று, டைரக்டர் முருகதாஸ் அவர்களே நேரடியாக செலக்ட் செய்தார். என்னுடன் என்னைப் போல சீனியர் சிட்டிஸன்கள்(!) பலரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அஸிஸ்டெண்ட் டைரக்டர் எங்களிடம் வந்து, நாங்கள் தாடி வளர்க்கத் தொடங்க வேண்டும் என்றும், அந்த கெட் அப் படம் முடியும் வரையிலும் இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.
தளபதி விஜய்யுடன் படம் முழுவதும் வரும் வாய்ப்பு என்று தெரிந்தபோது – பிரமிப்பாகவும், எக்ஸைட்ட் ஆகவும் இருந்த்து.
விஜய் மிகவும் ரிசர்வ்ட் என்று சொல்வார்களே, படப்பிடிப்பில் அவருடன் பேச முடியுமா என்று ஆவலாக இருந்தது.
ஆனால், விஜய் படப்பிடிப்பில் எல்லோருடனும் அன்புடனும் சகஜமாகவும் பழகி, எங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
எங்கள் சக நடிகர் ஒருவருக்கு பிறந்த நாள் வந்த போது, கேக் வெட்டி, எங்களுடன் அவரது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
புஷ்பா கார்டன்ஸ், வளசரவாக்கத்தில் முதியோர் இல்லம் செட் போடப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது.
ஒரு நாள் படப்படிப்பின்போது, சகஜமாக என் அருகில் அமர்ந்து, என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி, விசாரித்து, கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேல், உரையாடியது மறக்கவே முடியாது.
படத்தில் விஜய், முதியோர் இல்லத்தில் எங்கள் அனைவரிடமும், மீடியாவின் கவனத்தை திருப்புவது பற்றி பேசுவது போல ஒரு காட்சியை பார்த்திருப்பீர்கள்.
மிக நீண்ட வசனம் – ஏற்ற இறக்கங்களுடன் – உணர்ச்சி ததும்ப அவர் பேசியபோது, எல்லோரும் பிரமித்துப் போனோம்.
காட்சி படமாகி முடிந்து, அவர் கிளம்பத் தயாரான போது, அவர் அருகில் சென்று – ’சார், ஒரு நிமிஷம் உங்களோட பேசணும்’ என்றேன்.
‘சொல்லுங்க’, என்றார் சகஜமாகவும் அன்புடனும்.
‘ரொம்ப அருமையாக, பிரமாதமாகப் பேசினீங்க சார், இந்த சீன் ரசிகர்ளிடமும் பொதுமக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும்’, இந்த சீன் நிச்சயமாக மிகப் பெரிய அளவில் பேசப்படும் சார்’, என்று என்னுடைய பாராட்டுக்களை மனப்பூர்வமாக தெரிவித்தேன்.
‘உங்களுக்குப் பிடிச்சிருந்த்தா சுப்ரமணியம் சார், ரொம்ப தாங்க்ஸ்’ என்று மலர்ந்த முகத்துடன் அவர் நன்றி சொன்ன போது, சந்தோஷமாக இருந்தது.
அவருடன் படத்தில் சிறிய வேட்த்தில் நடித்த என்னுடைய பாராட்டுக்களை, முக்கியத்துவம் கொடுத்து, நன்றி சொன்னது, அவர் மேல் இருக்கும் அன்பையும் மரியாதையையும் இன்னும் அதிகரித்த்து.
அவரது பிறந்த நாளுக்கு சில நாட்களுக்கு முன்னால் –
யூனிட்டில் ‘விஜய் எல்லோருக்கும் பிரியாணி விருந்து கொடுக்கப் போறாராம்’ என்று பேசிக் கொண்டார்கள்.
யூனிட் மட்டும்தான் – இல்ல இல்ல – கூட நடிக்கிற நம்ம எல்லோருக்கும்தான், என்று ஒரு ஊகம்.
எல்லோரையும் குடும்பத்துடன் வரச் சொல்லப் போறாங்களாம் என்று ஒரு தகவல்.
அது எப்படி முடியும், கல்யாண வீடு மாதிரி இருக்குமே என்று ஒரு பேச்சு.
யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு – படப்பிடிப்புக்குக் காலையில் வந்தவுடன், யூனிட்டிலிருந்த எல்லோருக்கும் தகவல் சொல்லப்பட்டது.
இன்று மதியம் விஜய் எல்லோருக்கும் விருந்து வழங்குகிறார். எல்லோரும் குடும்பத்துடன் வரும்படி அழைத்திருக்கிறார்!!!
அனேகமாக எல்லோருமே தயாராகத்தான் இருந்தார்கள். அவரவர் வீட்டுக்கு ஃபோன் கால்கள் பறந்தன.
பின்னே???!!!! தளபதி விஜய் தரும் விருந்தில் கலந்து கொள்வது என்றால் சாதாரண விஷயமா?
நான் என் மனைவியிடம் ஃபோனில் தகவல் சொல்லி விட்டு, வீட்டுக்குப் போய் அழைத்துக் கொண்டு வந்தேன்.
என் மனைவியிடம் பல கேள்விகள் இருந்தன –
விஜய்யைப் பார்க்க முடியுமா? ஷூட்டிங் பாக்கலாமா? விஜய் பேசுவாரா? ஃபோட்டோ எடுக்க அலவ் பண்ணுவாங்களா என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வந்தார்.
எதற்கும் இருக்கட்டும் என்று காமிராவையும் கொண்டு வந்தார்.
மதிய விருந்துக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
சைவம், அசைவம் என்று தனித் தனியான பந்திகள்.
எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் விதமாக, நடிகர் விஜய் அவர்களே, எஙகள் அனைவருக்கும் பிரியாணி பரிமாறி, விருந்து அளித்தார்.
ஆம், கிட்ட்த்தட்ட 400 பேருக்கும் மேல் வந்திருந்தோம்.
அத்தனை பேருக்கும் பொறுமையாகவும் சிரித்த முகத்துடனும், அவரே பரிமாறினார்.


எல்லோருக்கும் பரிமாறி முடித்து, எல்லோரும் சாப்பிட்டாச்சா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்குப் பிறகுதான் அவர் சாப்பிட்டார்.
இது மட்டுமா?!
முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களாக நடித்த எங்கள் அனைவருக்கும் அன்று உடைகள் பரிசளித்தார்.
அத்துடன் ஒவ்வொருவருடைய குடும்பத்தினருடனும, தனித்தனியாக ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்.
அனைவரிடமும் அன்புடன் உரையாடினார்.
கிட்ட்த்தட்ட ஒன்றரை வருடங்கள் - கத்தி படத்தில் அவருடன் நடித்த்து மறக்க முடியாத ஒன்று.
படப்பிடிப்பு நிறைவடைந்து, சில வாரங்களுக்குப் பிறகு – மீண்டும் ஒரு தகவல் –
டைரக்டர் முருகதாஸ், நடிகர் விஜய் இருவரும் எங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்க அழைத்திருக்கிறார்கள்.
இங்கே நாங்கள் என்று நான் குறிப்பிடுவது – படத்தில் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களாக நடித்தவர்கள் – கிட்ட்த்தட்ட 40 பேர் – எல்லோருமே அறுபது வயதைக் கடந்தவர்கள்.
எங்கள் அனைவரிடமும் டைரக்டர் முருகதாஸ் சகஜமாக, சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்.
ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்த போது – எங்கள் அனைவரிடமும் படம் முடிந்த பிறகு ஒரு நாள் சந்தித்துப் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
விஜய் அவர்கள் ஏற்கனவே விருந்து கொடுத்து விட்டாரே, இப்போது மீண்டும் சந்திப்புக்கு அழைதிருக்கிறாரே என்று ஒரு ஆச்சரியம்.
ஏவிஎம் ஸ்டுடியோவில் மாலை நேரத்தில் எல்லோரும் கூடினோம்.
விஜய் எங்கள் எல்லோருக்கும் விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்து, ஆச்சரியத்திலும், ஆன்ந்தத்திலும், திக்கு முக்காட செய்தார். அத்துடன் படப் பாடல்கள் அடங்கிய சி.டி. ஒன்றும் வழங்கப்பட்ட்து
விஜய், முருகதாஸ் இருவருடன், புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

என் கைகளைக் குலுக்கி, தோள் மீது கை போட்டு, அன்புடன் என்னை அணைத்துக் கொண்டார் விஜய்.


மறக்க முடியுமா – அந்த்த் தங்கத் தருணங்களை!!!

Friday, 8 May 2015

ரசித்தவை ருசித்தவை - 1 - பட்டர் நான், கார்லிக் நான், சன்னா மசாலா

ஹோட்டலில் நாம் ஆர்டர் செய்யும் உணவுகளை வீட்டிலேயே செய்து பார்க்க ஆசையாக இருந்தது.

அதே போல பிரபலமாக பேசப்படும் உணவுகளையும் சமைத்துப் பார்க்க நினைத்தேன்.

அந்த வகையில் சமீபத்தில் நான் செய்து பார்த்த உணவுகள்:

சரவணபவன் ஹோட்டல் சாம்பார்
பட்டர் நான் மற்றும் கார்லிக் நான்
சன்னா மசாலா
ஜீரா ரைஸ்
வெஜ் கடாய்
சிதம்பரம் கொத்ஸு

எல்லாமே மிகவும் நன்றாக வந்தது.

இணையத்தில் இப்போது நிறைய தோழிகள், வித விதமான சமையல் குறிப்புகளை, புகைப்படங்களுடன் தந்து, அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தரும் குறிப்புகளின்படி சமைத்தால், பிரமாதமாக வருகிறது.

மேலே சொன்ன குறிப்புகள் எல்லாம் பல ப்ளாக்குகளில் தேடி, அதன் படி சமைத்துப் பார்த்ததுதான்.

முதலில் பட்டர் நான் மற்றும் கார்லிக் நான்:

அறுசுவை தளத்தில், வனி வசுவின் குறிப்பைப் பார்த்து செய்தது:

லிங்க் இதோ:

பட்டர் நான்/கார்லிக் நான் செய்யும் முறை

இந்தக் குறிப்பில் கொடுத்திருந்தது போல,

2 கப் மைதா மாவில், பேகிங் பௌடர் 3/4 டீஸ்பூனும், சோடா உப்பு 1/4 டீஸ்பூனும் கலந்து சலித்து வைத்தேன்.

பிறகு,  அரை கப் வெதுவெதுப்பான பால், அரை கப் தயிர், சிறிது உப்பு, 1/2 டீஸ்பூன் சீனி இவற்றை மாவில் கலந்து, விரல்களால் கலந்து, பிசைந்து வைத்தேன். மாவு சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும் அளவுக்கு, மேலும் சிறிது தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைத்தேன்.

ஒரு பாத்திரத்தில் பிசைந்த மாவை உருட்டி வைத்து, ஒரு வெள்ளைத் துணியை நனைத்து, மாவின் மேல் போட்டு, ஒரு அகலமான தட்டைப் போட்டு,  மூடி வைத்தேன்.

4 மணி நேரம் பிசைந்த மாவு ஊறியதும்,  எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு,  மைதா மாவைத் தொட்டு, சப்பாத்திகளாக இட்டு வைத்தேன்.

ஒரு நான் ஸ்டிக் தவாவை அடுப்பில் காய வைத்தேன்.

தேய்த்து வைத்திருந்த சப்பாத்தியின் ஒரு பக்கத்தில், கொஞ்சம் தண்ணீர் தெளித்தேன்.

தண்ணீர் தெளித்த பக்கத்தை, சூடேறிய தவாவில் போட்டு, சுற்றி வர ஓரங்களை ஒட்டினேன்.

இப்படி ஒட்டியதுமே, நன்றாக கொப்பளங்கள் வந்து, அங்கங்கே உப்பலாக ஆகி, வேக ஆரம்பித்தது.

தீயைத் தணித்து, ஒரு மூடியைப் போட்டு, 1 நிமிடம் வேக விட்டேன்.

பிறகு, அடுத்த பக்கம் திருப்பிப் போட்டு, ஓரங்களை, மர சட்டுவத்தால், நிதானமாக அழுத்தி விட்டு,  வெந்ததும் எடுத்தேன்.

ரூம் டெம்பரேச்சரில் இருக்கும் வெண்ணெயை, இந்த நான் மீது தடவி, பரிமாறினேன்.

கார்லிக் நான்:

பூண்டு பற்களை, தோல் உரித்து, நன்றாகத் தட்டி வைத்துக் கொண்டேன்.

நான் சூடாக இருக்கும்போதே, இரண்டு பக்கமும் இந்த பூண்டு விழுதை தடவி, பரிமாறினேன்.

ஹாட் பேக்கில் எடுத்து வைத்த நான்கள், ஐந்து மணி நேரத்துக்குப் பிறகும் கூட, சாஃப்ட் ஆக இருந்தது.

வனி சொல்லியிருந்த மாதிரி,  தவாவில் போட்ட நானை,  திருப்பிப் போடும்போது, அடுப்பில் நேரடியாக சுட முயற்சி செய்தேன், அது எனக்கு சரியாக வரவில்லை. அதனால் தவாவிலேயே திருப்பிப் போட்டு, வேக வைத்து, எடுத்தேன்.

இதற்குத் தொட்டுக் கொள்ள சன்னா செய்தேன்.

அறுசுவை தளத்தில் நான் கொடுத்திருக்கும் க்ரீன் பீஸ் மசாலாவின் செய்முறைதான் சன்னா மசாலாவுக்கும்.

பட்டாணிக்கு பதிலாக, கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்து, சேர்க்க வேண்டும்.

குறிப்பின் லிங்க் இதோ:

சன்னா மசாலா/க்ரீன் பீஸ் மசாலா

பட்டர் நான் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால், எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது, இது சரியாக வருமா என்று.

சாதாரண சப்பாத்திக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்ததும், இனி நன்றாக செய்து விட முடியும் என்று புரிந்தது.

சப்பாத்தி செய்யும்போது, இவ்வளவு நேரம் பிசைந்த மாவை ஊற வைப்பதில்லை.

மாவில் சேர்க்கும் பேகிங் சோடா, சோடா உப்பு முதலியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முக்கியமான வித்தியாசம் - தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியின் ஒரு பக்கத்தில் தண்ணீர் தெளித்து, தவாவில் ஒட்டி வைத்து, மூடி வைத்து, வேக விடுவது.

இன்னும் சில தோழிகள்  - தங்கள் குறிப்புகளில் - சோடா உப்பு/பேகிங் சோடாவுக்கு பதிலாக ஈஸ்ட் சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்த முறை செய்யும்போது, ஈஸ்ட் அல்லது ஈனோ சால்ட் சேர்த்து செய்து பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

ஃபோட்டோ பிறகு சேர்க்கிறேன்.