Friday, 8 May 2015

ரசித்தவை ருசித்தவை - 1 - பட்டர் நான், கார்லிக் நான், சன்னா மசாலா

ஹோட்டலில் நாம் ஆர்டர் செய்யும் உணவுகளை வீட்டிலேயே செய்து பார்க்க ஆசையாக இருந்தது.

அதே போல பிரபலமாக பேசப்படும் உணவுகளையும் சமைத்துப் பார்க்க நினைத்தேன்.

அந்த வகையில் சமீபத்தில் நான் செய்து பார்த்த உணவுகள்:

சரவணபவன் ஹோட்டல் சாம்பார்
பட்டர் நான் மற்றும் கார்லிக் நான்
சன்னா மசாலா
ஜீரா ரைஸ்
வெஜ் கடாய்
சிதம்பரம் கொத்ஸு

எல்லாமே மிகவும் நன்றாக வந்தது.

இணையத்தில் இப்போது நிறைய தோழிகள், வித விதமான சமையல் குறிப்புகளை, புகைப்படங்களுடன் தந்து, அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தரும் குறிப்புகளின்படி சமைத்தால், பிரமாதமாக வருகிறது.

மேலே சொன்ன குறிப்புகள் எல்லாம் பல ப்ளாக்குகளில் தேடி, அதன் படி சமைத்துப் பார்த்ததுதான்.

முதலில் பட்டர் நான் மற்றும் கார்லிக் நான்:

அறுசுவை தளத்தில், வனி வசுவின் குறிப்பைப் பார்த்து செய்தது:

லிங்க் இதோ:

பட்டர் நான்/கார்லிக் நான் செய்யும் முறை

இந்தக் குறிப்பில் கொடுத்திருந்தது போல,

2 கப் மைதா மாவில், பேகிங் பௌடர் 3/4 டீஸ்பூனும், சோடா உப்பு 1/4 டீஸ்பூனும் கலந்து சலித்து வைத்தேன்.

பிறகு,  அரை கப் வெதுவெதுப்பான பால், அரை கப் தயிர், சிறிது உப்பு, 1/2 டீஸ்பூன் சீனி இவற்றை மாவில் கலந்து, விரல்களால் கலந்து, பிசைந்து வைத்தேன். மாவு சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும் அளவுக்கு, மேலும் சிறிது தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைத்தேன்.

ஒரு பாத்திரத்தில் பிசைந்த மாவை உருட்டி வைத்து, ஒரு வெள்ளைத் துணியை நனைத்து, மாவின் மேல் போட்டு, ஒரு அகலமான தட்டைப் போட்டு,  மூடி வைத்தேன்.

4 மணி நேரம் பிசைந்த மாவு ஊறியதும்,  எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு,  மைதா மாவைத் தொட்டு, சப்பாத்திகளாக இட்டு வைத்தேன்.

ஒரு நான் ஸ்டிக் தவாவை அடுப்பில் காய வைத்தேன்.

தேய்த்து வைத்திருந்த சப்பாத்தியின் ஒரு பக்கத்தில், கொஞ்சம் தண்ணீர் தெளித்தேன்.

தண்ணீர் தெளித்த பக்கத்தை, சூடேறிய தவாவில் போட்டு, சுற்றி வர ஓரங்களை ஒட்டினேன்.

இப்படி ஒட்டியதுமே, நன்றாக கொப்பளங்கள் வந்து, அங்கங்கே உப்பலாக ஆகி, வேக ஆரம்பித்தது.

தீயைத் தணித்து, ஒரு மூடியைப் போட்டு, 1 நிமிடம் வேக விட்டேன்.

பிறகு, அடுத்த பக்கம் திருப்பிப் போட்டு, ஓரங்களை, மர சட்டுவத்தால், நிதானமாக அழுத்தி விட்டு,  வெந்ததும் எடுத்தேன்.

ரூம் டெம்பரேச்சரில் இருக்கும் வெண்ணெயை, இந்த நான் மீது தடவி, பரிமாறினேன்.

கார்லிக் நான்:

பூண்டு பற்களை, தோல் உரித்து, நன்றாகத் தட்டி வைத்துக் கொண்டேன்.

நான் சூடாக இருக்கும்போதே, இரண்டு பக்கமும் இந்த பூண்டு விழுதை தடவி, பரிமாறினேன்.

ஹாட் பேக்கில் எடுத்து வைத்த நான்கள், ஐந்து மணி நேரத்துக்குப் பிறகும் கூட, சாஃப்ட் ஆக இருந்தது.

வனி சொல்லியிருந்த மாதிரி,  தவாவில் போட்ட நானை,  திருப்பிப் போடும்போது, அடுப்பில் நேரடியாக சுட முயற்சி செய்தேன், அது எனக்கு சரியாக வரவில்லை. அதனால் தவாவிலேயே திருப்பிப் போட்டு, வேக வைத்து, எடுத்தேன்.

இதற்குத் தொட்டுக் கொள்ள சன்னா செய்தேன்.

அறுசுவை தளத்தில் நான் கொடுத்திருக்கும் க்ரீன் பீஸ் மசாலாவின் செய்முறைதான் சன்னா மசாலாவுக்கும்.

பட்டாணிக்கு பதிலாக, கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்து, சேர்க்க வேண்டும்.

குறிப்பின் லிங்க் இதோ:

சன்னா மசாலா/க்ரீன் பீஸ் மசாலா

பட்டர் நான் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால், எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது, இது சரியாக வருமா என்று.

சாதாரண சப்பாத்திக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்ததும், இனி நன்றாக செய்து விட முடியும் என்று புரிந்தது.

சப்பாத்தி செய்யும்போது, இவ்வளவு நேரம் பிசைந்த மாவை ஊற வைப்பதில்லை.

மாவில் சேர்க்கும் பேகிங் சோடா, சோடா உப்பு முதலியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முக்கியமான வித்தியாசம் - தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியின் ஒரு பக்கத்தில் தண்ணீர் தெளித்து, தவாவில் ஒட்டி வைத்து, மூடி வைத்து, வேக விடுவது.

இன்னும் சில தோழிகள்  - தங்கள் குறிப்புகளில் - சோடா உப்பு/பேகிங் சோடாவுக்கு பதிலாக ஈஸ்ட் சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்த முறை செய்யும்போது, ஈஸ்ட் அல்லது ஈனோ சால்ட் சேர்த்து செய்து பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

ஃபோட்டோ பிறகு சேர்க்கிறேன்.






No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.